Tuesday, September 2, 2014

இனிப்பும் டைரியும் இன்னும் சில நினைவுகளும்


"இன்னிக்காவது அவரைப் போய் பார்த்துட்டு வந்துடலாம்" - அம்மா.

" போலாம். அக்கா கிட்ட கேட்டுண்டு மத்தியானத்துக்கு மேல போகலாம்" - அப்பா.

தாத்தாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஹோமில் கொண்டு போய் அவரை சேர்த்து மூன்று மாதம் ஆகிறது.அதற்காக அம்மாவையும் அப்பாவையும் கூட என்னையும் கரித்துக் கொட்டாதவர்கள் இல்லை. வெளியே சுமூகமாகப் பேசினாலும் உள்ளுக்குள் வன்மம் இருந்தது சிற்சில பேச்சுகளிலும் செய்கைகளிலும் சர்வ நிச்சயமாக வெளிப்பட்டது.

பாட்டி இது பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. எங்களையும் பட வேண்டாமென்று சொல்லி விட்டாள்." கூட வெச்சு பாத்துக்கறவாளுக்கு தான் தெரியும் நரகம்.நீ எதுக்கு மனசக் குழப்பிக்கறே? நான் சொல்லி தான் கொண்டு விட்டதுன்னு சொல்லு யாரானும் கேட்டா" என்று தீர்மானமாகச் சொன்னாள். அவள் திடத்தில் தான் அதைப் பண்ண முடிந்தது. பிறர் பேச்சைக் கேட்டும் தாங்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பதும் அவளால் தான்.

ஷூவை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். வெளியே லேசாக, மிக லேசாகக் குளிர் காற்றில் கலந்திருந்தது.

கிளம்பிப் பாதி தூரம் கூடப் போகவில்லை.அம்மாவிடமிருந்து போன் . தாத்தா போய் விட்டார்.

அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குப் போய் அப்பாவையும் கூட்டிக் கொண்டு ஹோமுக்கு விரைந்தேன்.எல்லா சம்பிரதாயங்களும் முடிய இரண்டு மணி நேரம்.

அத்தை, அத்திம்பேர் வந்தாயிற்று. பாட்டியையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். பாட்டி எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். எல்லாம் முடிந்து , ஏற்பாடு பண்ணி இருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி விட்டு, பாட்டியும் அப்பாவும் ஏறிக் கொண்டனர். அத்தையும் கணவரும் அவர்கள் வீட்டுக்கு. அப்புறம் வருவதாகக் கூறி அகன்றார்கள்.

வரும் வழியிலேயே முத்து சாஸ்திரிகளுக்கு சொல்லியாயிற்று. அவரே குளிர் பெட்டிக்கும் ஏற்பாடு செய்து விடுவார். சித்தப்பா ஊரிலிருந்து வர வேண்டும். தகவல் போயிருக்கும் இன்னேரம்.

----------------------------------------------

தாத்தா அப்போதெல்லாம் புத்தகங்கள் நிறைய படிப்பார். விகடன், குமுதம், கல்கி, முதற்கொண்டு இதயம் பேசுகிறது வரை எல்லாம் வாங்குவார். அதிலும் இதயம் பேசுகிறது , சரவணா ஸ்டோர்ஸாக மாறி சில காலம் கழித்து நின்று போகும் வரை வாங்கிக் கொண்டிருந்தார். வாசலில், மாடிக்குப் போகும் படிக்கட்டில் உட்கார்ந்து சுள்ளென்று வெயிலடித்தாலும் நுணுக்கி நுணுக்கிப் படித்துக் கொண்டிருப்பார்.கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி இனிமேல் படிக்க முடியாது என்ற நிலைக்கு வரும் வரை புஸ்தகம் வாங்குவதை விடவில்லை.

பேரன் பேத்திகள் மேல் பாசம் எல்லாம்  பெரிதாக ஒன்றும் கிடையாது. அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவரும் செய்ய மாட்டார். பெரிய பேரன் பெரிய பேத்தி மேல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் பாசம். மற்றவர்களை எல்லாம் அவரவர் பேர் சொல்லி அழைப்பவர் அவர்களை மட்டும் பேர் சுருக்கி அழைப்பார்.

அப்பாவுக்கு அலுவலகத்தில் வேறு பெயர். ஆனால் அவர் பிறக்கும் போது தமிழ்நாட்டுக்கு ராஜேந்திர பிரசாத் வந்தாராம். அதனால் நான்காவது அல்லது ஐந்தாவது பேராக அப்பாவுக்கு ராஜேந்திர பிரசாத் என்ற பெயரும் வைக்கப் பட்டது. சொந்தக்காரர்கள் எல்லாரும் பாட்டியும் , அவரை ராஜேந்திரா என்பார்கள். ஆபீஸிலும் நண்பர்கள் மத்தியிலும் சர்டிபிகேட் பெயர். அப்பாவை பிரசாத்து என்று அழைத்தது தாத்தா மட்டுமே.

தாத்தாவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. பெரிதாக ஒன்றும் இருக்காது. தினப்படி சங்க்யைகள் தான் பெரும்பாலும். காலையில் வெளி சென்றது, குளித்த நேரம், சாப்பிட்ட நேரம் இப்படி.மேட்ச் நடக்கும் நாட்களில் கிரிக்கெட் ஸ்கோர் குறிக்கப்பட்டிருக்கும்.

சில சமயம், அடுத்த நாள் எங்காவது ஊருக்குப் போவதாகத் திட்டம் இருந்தால், டைரியில் அடுத்த நாளுக்கான பக்கத்தில் முதல் நாளே இத்தனை மணிக்கு கிளம்பினேன், இத்தனை மணிக்கு சேர்ந்தேன். இத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தேன் என்று எழுதி வைத்து விடுவார்.வீட்டில் சண்டை வாக்குவாதம் நடந்தால் இன்னும் விசேஷம். " இன்று பிரசாத் என்னுடன் சண்டை போட்டான்.மனம் புண்படும்படி பேசினான்" என்று எழுதி வைப்பார்.

தான் அதை ஒரு பத்து முறை படிப்பார். எல்லாரும் படிக்க வேண்டுமென்பதற்காக நடு வீட்டில் டைரியை திறந்து வைத்து விட்டு காத்திருப்பார். இதெல்லாமே ஒரு வகையான அவரின் கவன ஈர்ப்பு டெக்னிக்குகள் என்று பாட்டி சொல்லித் தெரிந்து கொண்டோம்.

தாத்தாவுக்கு நாங்களெல்லாம் பிறந்ததிலிருந்தே காது சுத்தமாகக் கேட்காதென்பதால், அவர் பற்றிய சந்தேகங்களை எல்லாம் பாட்டியிடம் தான் கேட்போம்.சலிக்காமல் பதில் சொல்வாள்.

"பாட்டி... எப்பருந்து பாட்டி தாத்தாவுக்கு சொட்டையாச்சு?"

"எனக்கு பதினாலு வயசு இருக்கறச்சே கல்யாணம் ஆச்சு. உங்க தாத்தாவுக்கு இருபத்தஞ்சு. கல்யாணத்துக்கப்புறம் அஞ்சாறு வருஷம் தான் முடியிருந்தது. முப்பத்தஞ்சு வரதுக்குளேயே முழுசா ஆயாச்சு"

"பாட்டி... தாத்தாவுக்கு எப்ப பாட்டி காது கேக்காம போச்சு?"

"அதுவும் நாப்பது வயசுலயே போயாச்சு. எல்லாம் கேசரிமங்கலம் பரம்பரை சொத்து.அவருக்கு காது போனதால எனக்குத் தொண்டை போச்சு".

"பாட்டி...தாத்தாவுக்கு ஏன் பாட்டி ஒரு பல்லு கூட இல்ல?"

"சும்மா ஸ்கூலுக்கு போனோமா பாடம் சொல்லிக் குடுத்தோமா வந்தோமான்னு இருந்தாத் தானே? ஊன்னா மட்டையத் தூக்கிண்டு கிரிக்கெட் மேட்ச் விளையாடப் போறேன் பேர்வழின்னு கிளம்பிட வேண்டியது. ஒவ்வொரு தரமும் மூஞ்சி முகரைன்னு அடி பட்டுண்டு வந்து நிக்க வேண்டியது. அப்ப்டி பட்டு பட்டு தான் முடி போறதுக்கு முன்னாடியே பூராப் பல்லும் போயாச்சு".

நுணுக்கி நுணுக்கி டைரியில் கிரிக்கெட் ஸ்கோர் எழுதி வைப்பதன் காரணம் புரிந்தது.

இது எல்லாவற்றையும் விட தாத்தாவைப் பற்றி எப்போதும் ஆச்சர்யப் பட வைக்கும் விஷயங்களில் ஒன்று அவரது இனிப்புக் காதல்.

இனிப்பு என்றால் இனிப்பு அப்படியொரு இனிப்பு. குழந்தைகள் கூட அவ்வளவு இனிப்பு சாப்பிட மாட்டார்கள்.

தினமும் தவறாமல் குறைந்தது ஆறேழு பாக்கெட் ஜெம்ஸ், ஆறேழு பாக்கெட் பாப்பின்ஸ், இது போக தாத்தா பப்பரமின்ட் என்று குறிப்பிடும் சூடமிட்டாய், போதாதென்று வீட்டில் இருக்கும் சர்க்கரை, வெல்லம், என்று தினம் இனிப்பில் திளைப்பு. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மஞ்சள் பை ஒன்றை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்குப் போய் சரம் சரமாக ஜெம்ஸ் பாக்கெட்டுகள், கட்டு கட்டாக பாப்பின்ஸ் பாக்கெட்டுகள் என்று வாங்கி வந்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்வார்.

ஒரு எவர்சில்வர் டிபன் டப்பாவில் பாப்பின்ஸை பிரித்துப் போட்டுக் கொண்டு, காலைக்கு இவ்வளவு, மதியம் இத்தனை, ராத்திரி தூங்கும் போது இத்தனை என்று எண்ணி வைப்பார். ராத்திரி எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும், சரியான நேரத்துக்கு மருந்து சாப்பிடும் சீக்காளி போல், தூக்கத்திலேயே, அந்த டிபன் பாக்ஸை திறந்து ரெண்டு ஜெம்ஸை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சப்ப ஆரம்பித்து விடுவார்.

"பகவான் என்னத்துக்கு ராத்திரின்னு ஒண்ணு வெச்சு அந்த நேரத்துல தூங்கணும்னு வெச்சிருக்கான்? இல்லன்னா அந்த நேரத்திலயும் மனுஷா சமைக்கிறேன் சாப்பிடறேன்னு சொல்லிண்டு என்னத்தையாவது உருட்டிண்டு இருப்பான்னு தானே? இந்த மனுஷனுக்கு அதெல்லாம் எள்ளளவு கூட பொருந்தாது." என்பாள் பாட்டி.

சாப்பிடும் போது வடாம் பொறித்துப் போட்டால் தட்டருகே கொண்டு போகும் போதே டயட்டில் இருப்பவர் போல் பதறி ரெண்டே ரெண்டு போறும்டீம்மா..." என்று தடுப்பார்.

சாப்பிட்டு முடித்து கை அலம்பினதும் சுவற்றில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு எப்போதும் பாட்டியை அழைக்கும் குரலில் "டீ கங்கா.." என்பார்.அந்தக் குரலுக்கு என்ன அர்த்தம் என்று பாட்டிக்குத் தெரியும்,"க்கும்.. இதுக்கொண்ணும் குறைச்சலில்லை" என்று தோளில் முகத்தை இடித்துக் கொண்டு ஒரு பிளேட்டில் சுடச் சுட வடாம் நிரப்பிக் கொண்டு போய்க் கொடுப்பாள்.பல்லில்லாததால் ஊற வைத்து அதை ரசித்து சாப்பிடுவார் தாத்தா. இதை மட்டுமல்ல. எல்லா கடினமான மிட்டைகளையும் ஊற வைத்து நிதானமாகத் தின்பார்.

"ஒரு முட்டாய் சப்பி சாப்டாலே மேல் அண்ணமெல்லாம் பொத்து போய்டறது. இவர் எப்படித் தான் சலிக்காம இப்படி சாப்பிடறாரோ?" என்று அங்கலாய்ப்பாள் அம்மா.

எதற்கெடுத்தாலும் "டீ கங்கா" என்று பாட்டியைத் தான் அழைப்பார்.முதலில் தாத்தா எப்போது அழைத்தாலும் எதுவும் சொல்லாமல் பாட்டி போய் நிற்பாள். வயதாக ஆக , " எப்பப்பாரு என்ன ஏலம் வேண்டிக் கிடக்கு?" என்று சலித்துக் கொள்வாள். காரணம் இல்லாமல் இல்லை. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் தண்ணீர் டம்ளரைக் கூட அடுத்த அறையிலிருக்கும் பாட்டியை கூப்பிட்டு தான் எடுத்துக் கொடுக்கச் சொல்வார் தாத்தா.சலிப்பில்லாமல்?

வயது ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கும் திறன் குறைந்தது தாத்தாவுக்கு. முதலில் புத்தகம் வாங்குவது நின்று போனது.சிறிது சிறிதாக டைரி எழுதுவதும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போனது. பெரும்பாலான நேரம் ஓய்வெடுப்பதிலும் தூங்குவதிலும் கழிக்கத் தொடங்கினார் தாத்தா.

ஆனால் இனிப்பும் எண்ணெய்ப் பலகாரமும் சாப்பிடும் ஆசை மட்டும் கொஞ்சம் கூடக் குறையவில்லை. லேசாகத் தாளிக்கும் மணம் அதிகமாக வந்தால் கூட, " என்னை அருகில் கூப்பிட்டு " அம்மா சமையல் உள்ள ஏதானும் பட்சணம் பண்றாளா? வாசனை வர்றதே?"

"க்கும்... இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. மனுஷா வீட்ல தாளிக்க தான் மாட்டாளோ? நன்னாத் தான் ஆச்சு போ" என்பாள் பாட்டி. அறுபது வருட வாழ்க்கையின் சலிப்புகள், ஏமாற்றங்கள், கோபங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியிடமிருந்து வெளிப்பட ஆரம்பித்தன.

தாத்தாவிடமும் நிறைய மாற்றங்கள். சிறு நீரை வேட்டியிலேயே ஒழுக்க ஆரம்பித்தார். பாத்ரூம் போகும் போது கதவை மூட மறந்து போய் அப்படியே நிற்பார்.பாட்டியின் சலிப்பு அதிகமாகத் தொடங்கியது.

வேட்டியில் ஆங்காங்கே மஞ்சள் கறைகள் தென்படத் துவங்கின.மல ஜலம் கழித்து விட்டு சரியாகக் கழுவிக் கொள்ளாமல் வீட்டுக்குள் வரத் தொடங்கினார்.போகப் போக நிலைமை இன்னும் மோசமானது. மலம் கழிக்க வேண்டும் போலிருந்தாலும் காரணமே இல்லாமல் அடக்கிக் கொள்ளத் தொடங்கினார். அதைக் கைகளால் எடுத்து வீடு முழுக்க ஆங்காங்கே போடத் துவங்கினார். அதை தேடிப் பிடித்து சுத்தம் செய்வதே பாட்டிக்கு வேலை ஆகிப் போனது.பல சமயங்களில் தாத்தாவைக் கண்டாலே வெடித்துக் கொந்தளிக்க ஆரம்பித்தாள் பாட்டி.

நிலமை கை மீறிப் போகவே என்ன பண்ணுவதென்று தெரியாமல் எல்லாரும் சங்கடத்தில் ஆழ்ந்து, கடைசியில் அவரை ஹோமில் சேர்ப்பது தான் ஒரே வழி என்று முடிவு செய்யப் பட்டது. பாட்டி  தான் முழுசாக சப்போர்ட் பண்ணினாள்.யார் யாரோ என்னென்னவோ பேசினாலும் ஒதுக்கினாள்.

ஹோமில் சேர்த்ததுமே நடமாட்டம் குறைந்து போனது தாத்தாவுக்கு. சாக்லேட் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார்.அவ்வப்போது உடல்நிலை சீரியசாகி மீண்டார். அப்ப்டி ஒரு ஞாயிறு காலை நடந்தது தான் முதலில் சொன்ன விஷயம்.

----------------------------------------------------------------------

தாத்தாவை வீட்டுக்குக் கொண்டு வந்தாயிற்று. குளிர் பெட்டி வந்திருந்தது. அதற்குள் தாத்தாவைக் கிடத்தி ஸ்விட்ச்சைப் போட்டு வைத்தேன். பாட்டியும் அம்மாவும் அருகில் அமர்ந்து கொண்டனர். அப்பா போனில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். லோக்கலில் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கினர்

பாட்டி என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறாள் என்று அறியவே முடியவில்லை. அறுபது வருஷ வாழ்க்கை. தாத்தா அவ்வளவுக்கொன்றும் உதாரண புருஷர் இல்லை. எத்தனை வலிகள்,  எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை புறக்கணிப்புகள், சண்டைகள், அதிகாரங்கள், ஏய்ப்புகள்... அத்தனையும் தாங்கிக் கொண்டு திடமாக இருக்கிறாள்.

என்ன யோசித்துக் கொண்டிருப்பாள்? " என்னை விட்டு விட்டு எனக்கு முன் போய் விட்டாயே என்றா? எப்படியெல்லாம் படுத்திய நீ இப்படிக் கிடக்கிறாயே என்றா? இல்லை கண்ணுக்குத் தெரியாத ஒரு நிம்மதியின் சுவடு அவள் மனதில் படிந்திருக்கிறதா? அனுமானிக்க முடியவில்லை.

மெல்ல அவள் அருகில் சென்று குனிந்து அவள் தலையைத் தடவி, " பாட்டி " என்றேன். தொண்டை அடைத்தது.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் கேட்டாள் " என்ன கண்ணா? பசிக்கறதாடா? ஏதானும் சாப்பிடறியா?"...


- தென்றல் - செப்டம்பர் 2014

1 comment:

  1. அற்புதமான நடை .கதாபாத்திரங்களின் பார்வையில் கதை நகர்வுகள் அழகான உணர்வுகளாய் நகர்ந்து செல்கிறது .நிறைய எழுதுங்கள் .எழுத்தின் ஆளுமை உங்களுக்குள் பரவி கிடக்கின்றது ..

    ReplyDelete