Thursday, September 11, 2014

கோடிமழை “ ஓ” வெனப் பேரிரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த மஞ்சள் பையை இறுக்கிக் கொண்டாள். என்னத்துக்கு இப்படி பேஞ்சு  கெடுக்குது இந்த மழை?” ஓரத்தில் உட்கார்ந்தால் சாரல் அடி அடியென்று அடித்ததால் நடுவில் தள்ளி அமர்ந்தாள். 

நேரம் ரொம்ப ஆகி விட்டதால் பதறிக் கொண்டிருந்தாள்.” பாப்பா வீட்ல தனியாக இருப்பா. மழை வேற இப்படிப் பேயாட்டம் ஊத்துது. இந்தப் புள்ள என்ன பண்ணுதோ?”  மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. “இப்பத் தான் அந்தா இந்தான்னு கொஞ்சமா பாப்பாவுக்கு சொரம் சரியாயிட்டு வருது. இப்ப பாத்து இப்புடி ஊதக் காத்தா வீசுதே? வெளியில எங்கயாவது வந்து நனைஞ்சு வெக்கப் போறா கிறுக்கு. குச்சுக் குள்ளேயே இருந்தா தேவல.பக்கத்து வீட்டுக்காரி கஞ்சியைக் கொடுத்தாளா தெரிலியே?

இது பைத்தியமாட்டம் கதவைத் தட்டிக் கூடக் கேக்காம உக்கார்ந்திருக்குமே? என்னத்தப் பண்றது.கிடக்கட்டும். நாம போயி எழுப்பி கஞ்சி குடுத்துக்கலாம் “ -தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

இந்த மனுசன் வேற நனைஞ்சுகிட்டே இருப்பாரே? பெண் மேலிருந்து ஞாபகம் புருஷனுக்குத் தாவியது. அடுத்த கணமே வேலைக்குப் போகும் முன் சாக்குப் படுகை மறைப்புக்குப் பின்னால் அவளைப் பிடித்துத் திமிறத் திமிற அவன் கொடுத்த முத்தம் ஞாபகம் வந்து குப்பென வெட்கம் அப்பிக் கொண்டது. செல்லமாகத் தலையிலடித்துக் கொண்டு தனக்குத் தானே சிணுங்கிக் கொண்டாள். 

மகிழ்ச்சியின் தொடர்ச்சியாகப் பிரார்த்தனை. “அந்த ராமநாதன் தான் என் குடும்பத்தக் காப்பாத்தணும்.பாப்பாவுக்கு சீக்கிரம் சுகமாயிரணும்”. அவன் பிரசாதம் பைக்குள் இருந்தது. மெல்லப் பையை விரித்துப் பார்த்தாள். விபூதி வாசனை வந்தது. கொஞ்சம் தெம்பாக இருந்தது.வண்டி மெல்லக் கிளம்பியது. மேலே பார்த்து இரு கைகளையும் கூப்பி வேண்டிக் கொண்டாள். “ ராமநாதா காப்பாத்துப்பா...”

-------------------------------------------------------

தலையைக் குலுக்கிக் கொண்டு நிகழ் உலகத்துக்கு வந்தான். இந்தப் பயணம் தான் தன் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கப் போகிறது. கடைசி முயற்சியாக பார்வதியின் அப்பாவிடம் பேச்சு வார்த்தை. இல்லையென்றால் அவர் சம்மதமின்றியே கல்யாணம். இது தான் அவன் முடிவு செய்து வைத்திருக்கிறான். 

பார்வதி தான் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாள். அவள் அப்பா இவனை அத்தனைப் பேச்சு பேசுவதைப் பார்த்தும் அவள் மனம் சஞ்சலத்திலேயே தான் இருக்கிறது. அந்த மட்டில் இவனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் அவளை விட்டுக் கொடுத்து விட முடியுமா என்ன?

என்ன ஆனாலும் சரி. முடிந்தவரை அவரை சமாதானப் படுத்த முயற்சி. பார்ப்போம். பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். வெளியில் அடித்துக் கொண்டிருந்த மழையை வெறித்தான்.

------------------------------------------------------------------------

ஷ்.. கையெடுய்யா... அட எடுய்யான்னா... மிக அடக்கமான குரலில் பேசியபடி வெட்கமும் குறும்பும் கொப்பளிக்க தன் தோள் மேல் படர்ந்த அவன் கையை விலக்குவது போல் விலக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் கையை அவன் எடுத்து விடக் கூடாதே என்று மனதுக்குள் ஆசை.

அவனுக்கா தெரியாது? கண்களில் மின்னும் குறும்பு அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. தைரியமாகச் சீண்டினான். சுற்றிலும் அதிகப் பேர் இல்லாததால் அவர்களைக் கேட்க யாருமில்லை.

வெளியில் பெய்யும் பேய் மழை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.அவன் சீண்டலில் மூச்சு வாங்க அவனை லேசாகத் தள்ளி விட்டு விட்டு சற்றே நகர்ந்து அமர்ந்தாள். ஜன்னலுக்கு வெளியே பெய்து கொண்டிருந்த மழையில் அவள் கவனம் பதிந்தது.

மழையின் வேகம் லேசான பயத்தைத் தந்தது. அவள் முகத்தைப் பார்த்தவன் அவளை நெருங்கி அமர்ந்தான். “அவள் முகத்தை நிமிர்த்தியவன், “ என்ன புள்ள பயமா இருக்குதா?” என்று கேட்டுப் புன்னகைத்தான்.” நாந்தான் இருக்கறேன்ல?” என்று கேட்டவாறு அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

இந்த முறை அவன் அணைப்பைத் தடுக்கவில்லை. அவன் தோள் மேல் ஏகாந்தமாகச் சாய்ந்து கொண்டாள். மழை இப்போது பயம் தரவில்லை.
----------------------------------------------------------------
பாதையே சுத்தமாகத் தெரியவில்லை. பழக்கத்தில் மெல்ல செலுத்திக் கொண்டிருந்தார் வண்டியை. லேசான, மிக லேசான பதற்றம் உடலில் பரவிக் கொண்டிருந்தது. இது போன்ற சூழல் அவருக்குப் புதிதல்ல. இருந்தாலும் இந்த முறை என்னவோ. வியர்வை மெல்லக் காதோரம் ஊறிக் கொண்டிருந்தது
.
வெளியில் காற்றோடு சேர்ந்த மழையின் சத்தம் காதைப் பிளப்பது போல் வண்டியின் சத்தத்தையும் மீறிக் கேட்டுக் கொண்டிருந்தது.வீட்டில் மனைவி மருந்து சாப்பிட்டாளா இல்லையா தெரியவில்லை. தான் இல்லாவிட்டால் அலட்சியமாக இருந்து விடுவாள். வழக்கத்தை விட இன்று தாமதம். அதனால் கவலை அதிகமாயிருந்தது.

குழந்தை மாதிரி அவள். கூட இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து சாப்பிடக் கூட நான் சொல்ல வேண்டும். அது சரி. எனக்குக் குழந்தை தானே அவள்?அவளுக்கு நான். வேறு யார்?

நினைவு எங்கெங்கோ அலைந்தாலும் பாதையில் கவனம் இருந்தது. எத்தனை வருஷப் பழக்கம்? நிலையம் நெருங்கி விட்டது தெரிந்தது. என்ன இது? ஒரே இருட்டாக இருக்கிறது? மழை இவ்வளவு பலமாகப் பெய்கிறதே? சிக்னல் வேலை செய்யவில்லை போலிருக்கிறதே? என்ன செய்வது? வண்டியை நிறுத்தி விட்டு சிக்னலுக்காகக் காத்திருந்தார். ஐந்து நிமிடம், பத்து நிமிடம். ம் ஹூம். சந்தடியே இல்லை.

பளிச்சென்று வெட்டிய மின்னலில் ஸ்டேஷன் கட்டிடம் தெரிந்து மறைந்தது. வண்டி நின்றிருந்த இடத்துக்கும் ஸ்டேஷனுக்கும் சில நூறு மீட்டர்கள் தான் இருக்கும்.ஒரு முடிவுக்கு வந்தவராக வண்டியின் ஹாரனை நீளமாக ஒலித்தார்.

ஒரு பெருமூச்சை வெளியிட்டு, வண்டியை மெல்ல நகர்த்தினார். ட்ராக்கின் மேல் கரை தொட்டு ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் மெல்ல நுழைந்தது வண்டி.

நாள் : 22 டிசம்பர் 1964
நேரம் : இரவு சுமார் 12 மணி
----------------------------------------------------------------

பின் குறிப்பு :

On the night of 22 December at 23:55 hours, train no.653, Pamban-Dhanushkodi Passenger, a daily regular service which left Pamban with 110 passengers and 5 railway staff, was only few hundred yards from entering the Dhanushkodi Railway Station when it was hit by a massive tidal wave. A few metres ahead of Dhanushkodi, the signal failed. With pitch darkness around and no indication of the signal being restored, the driver blew a long whistle and decided to take the risk. Minutes later, a huge tidal wave submerged all the six coaches in deep water. The whole train was washed away, killing all 115 on board.

தகவல் உதவி : Wikipedia

Friday, September 5, 2014

தமிழ்ச் சீரியல்களின் சீரிய பண்பாடுகள்


1 . ஆணாக இருந்தால் நிச்சயம் இரண்டு மனைவிகளும் பெண்ணாக இருந்தால் நிச்சயம் இரண்டு கணவர்களும் ( எண்ணிக்கை மாற்றத்துக்குட்பட்டது ) கொண்டிருப்பார்கள்.

2 . வெள்ளிக்கிழமை, அல்லது நல்ல நாள் ஏதாவது என்றால் நிச்சயம் தவறாமல் ஒரு சாவு சீனும் மனதை உருக்கும் பின்னணி இசையுடன் அழுகைக் காட்சியும் உண்டு. டோண்ட் மிஸ் இட் ஐ ஸே...

3 . சீரியலில் நல்லவர்களாக வருகிறவர்கள் எந்தக் காலத்திலும் போடும் சவால்களில் ஜெயிக்கத் துப்பில்லாதவர்களாகவே இருப்பார்கள். வில்லன்கள், வில்லிகளுக்கு மட்டுமே எல்லா சந்தர்ப்பங்களும் சாதகமாக இருக்கும். அப்படி நல்லவர்களுக்கு சாதகமாய் ஏதானும் நடந்தால் சீரியல் முடிவுக்கு வருகிறதெனக் கொள்க

4 . 30 நிமிட ஒளிபரப்பில் 10 நிமிட விளம்பர இடைவேளை போக சீரியல் நேரம் 20 நிமிடங்கள். அதில் நிச்சயம் 15 நிமிடங்கள் “ நாசமாப் போக,உன்னை அழிக்காம விட மாட்டேன், உன்னைக் கொன்னுட்டு தான் மறு வேலை, உருப்படுவியா, என் பாவம் உன்ன சும்மா விடாது “ இவை போன்ற மற்றும் இன்ன பிற தீந்தமிழ்ச் சொற்கள் புழங்கக் கேட்கலாம்.

5 . ஹீரோ வில்லன்களால் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் இடம் ஹீரோயினுக்கு நன்றாகத் தெரிந்த இடமாயிருக்கும். இருந்தாலும் அதைத் தவிர எல்லா இடங்களிலும் உயிரைக் கொடுத்துத் தேடுவார் ( குறைந்தது நாலு எபிசோடுகளுக்கு )

6 . நல்லவர்களாக இருப்பவர்கள் திடீரென்று கெட்டவர்களாக மாறி விடுவார்கள். இதை ஈடு செய்ய கெட்டவர்களாக இருக்கும் யாராவது கண்டிப்பாக நல்லவர்களாக மாறியே தீருவார்கள். டைரக்டருக்கு போர் அடிக்கும் போதெல்லாம் இது நடக்கும்.

7 . வில்லன்களும் வில்லிகளும் எல்லாரும் நடமாடும் இடத்திலேயே நின்று கொண்டு தைரியமாக சதியாலோசனை செய்வார்கள். எல்லா விஷயமும் தெரியும் நல்லவர்களுக்கு இதெல்லாம் மட்டும் காதில் விழவே விழாது. சீரியல் முடிகிற வரைக்கும்.

8 . சதி செய்து கணவன் மனைவியைப் பிரிக்கும் பெண்கள், அவர்கள் ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது பக்கத்திலேயே நின்று சீன் முடிகிற வரை சகுனிச் சிரிப்பு சிரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பாவம் சண்டை போடுகிறவர்களுக்கோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் குடும்பத்தாருக்கோ யாருக்குமே இதைப் பார்க்க வாய்க்காது.

9 . ஒரே ஒரு பாட்டு போட்டு வைத்திருப்பார்கள். ஹீரோ ஹீரொயின் ரொமான்ஸ், ஹீரோ காணாமல் போன ஹீரோயினை தேடுவது, ஒரு பாவமும் அறியா கதாநாயகியை போலீஸ் அடிப்பது, வில்லன் ஹீரோவை டார்ச்சர் செய்வது என்று எல்லா சீனுக்கும் அதே பாட்டு தான் பேக் கிரவுண்டில் ஒலிக்கும்.

10 . குழாயடியில் குறுக்கே குடத்தை விட்டவளுடன் சண்டை போடுவது போல் ஆ ஊன்னா அம்மனிடம் போய் சண்டை போடுவார்கள். பாவம் அம்மன். சில சமயம் தற்கொலை மிரட்டலெல்லாம் கூட விடுப்பார்கள்.

11 . இவர்கள் குளிக்க சாப்பிட பாத்ரூம் போகவெல்லாம் எப்போது தான் நேரம் ஒதுக்குவார்கள் என்று காண்போர் வியக்கும் வண்ணம் சில கேரக்டர்கள் எப்போதும் அடுத்தவரைக் கெடுக்க சதியாலோசனையிலேயே இருப்பார்கள்.

12 . ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வருகிறாற் போல் சட்டென்று ஹீரோ வில்லனையோ அல்லது வில்லன் ஹீரோவையோ சுட்டு விட்டால் அது ஏதோ ஒரு கேரக்டர் காணும் துர்சொப்பனம் எனக் கொள்க.

13 . எந்த சீன் ஆரம்பிக்கும் போதும் யாரேனும் ஒருவர் ஏதோ யோசனையிலிருப்பதும், இன்னொருத்தர் வந்து என்ன யோசிக்கிறீங்க என்று கேட்பதும் சீரியல் சீன்களின் துவக்க மரபு.

14. சீரியல்களின் முக்கால்வாசி இளம் பெண்களுக்கு , பொறுக்கிகள், ஏற்கனவே திருமணமானவர்கள், கள்ளக் கடத்தல் செய்பவர்கள் போன்ற ஆண்கள் மீதே ஈர்ப்பு ஏற்படும்.

15 . எந்தக் குடும்பத்திலும் ஐந்துக்குக் குறையாமல் பிள்ளைகள் இருப்பார்கள். ( அந்த முக்கோணத்தை இவர்களெல்லாம் பார்த்ததே இல்லையா?) ஒரு அண்ணன் நாலு தங்கச்சி, ஒரு அக்கா நாலு தம்பி, இல்லை ஐந்துமே பெண்கள் என பல பெர்முடேஷன் காம்பினேஷன்களில் இந்தக் குடும்பங்கள் காணக் கிடைக்கும் .


16 . முதல் சீரியலில் அடியாளாக நடிப்பவர் அடுத்த சீரியலில் டாக்டர். அந்த சீரியலில் டானாக நடிப்பவர் அடுத்த சீரியலில் சித்தர். அந்த சீரியலில் மந்திரவாதியாக நடிப்பவர் அடுத்த சீரியலில் பிசினஸ் மேக்னட்டு.... இது ஒரு சங்கிலித் தொடர்.


17 . கடைசியாக சீரியல் எடுப்பவர்களுக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டிருப்பவர்கள் டாக்டர்களே. இதை எல்லாம் பார்த்து பி பி எகிறிப் போய் குடும்பத் தலைவிகள் ( சில குடும்பத் தலைவர்கள் கூட ) டாக்டர் வீடுகளுக்குப் படை எடுக்கிறார்கள். டாக்டர்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

இப்போதைக்கு இவ்வளவு போதும்.

Tuesday, September 2, 2014

இனிப்பும் டைரியும் இன்னும் சில நினைவுகளும்


"இன்னிக்காவது அவரைப் போய் பார்த்துட்டு வந்துடலாம்" - அம்மா.

" போலாம். அக்கா கிட்ட கேட்டுண்டு மத்தியானத்துக்கு மேல போகலாம்" - அப்பா.

தாத்தாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஹோமில் கொண்டு போய் அவரை சேர்த்து மூன்று மாதம் ஆகிறது.அதற்காக அம்மாவையும் அப்பாவையும் கூட என்னையும் கரித்துக் கொட்டாதவர்கள் இல்லை. வெளியே சுமூகமாகப் பேசினாலும் உள்ளுக்குள் வன்மம் இருந்தது சிற்சில பேச்சுகளிலும் செய்கைகளிலும் சர்வ நிச்சயமாக வெளிப்பட்டது.

பாட்டி இது பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. எங்களையும் பட வேண்டாமென்று சொல்லி விட்டாள்." கூட வெச்சு பாத்துக்கறவாளுக்கு தான் தெரியும் நரகம்.நீ எதுக்கு மனசக் குழப்பிக்கறே? நான் சொல்லி தான் கொண்டு விட்டதுன்னு சொல்லு யாரானும் கேட்டா" என்று தீர்மானமாகச் சொன்னாள். அவள் திடத்தில் தான் அதைப் பண்ண முடிந்தது. பிறர் பேச்சைக் கேட்டும் தாங்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பதும் அவளால் தான்.

ஷூவை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். வெளியே லேசாக, மிக லேசாகக் குளிர் காற்றில் கலந்திருந்தது.

கிளம்பிப் பாதி தூரம் கூடப் போகவில்லை.அம்மாவிடமிருந்து போன் . தாத்தா போய் விட்டார்.

அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குப் போய் அப்பாவையும் கூட்டிக் கொண்டு ஹோமுக்கு விரைந்தேன்.எல்லா சம்பிரதாயங்களும் முடிய இரண்டு மணி நேரம்.

அத்தை, அத்திம்பேர் வந்தாயிற்று. பாட்டியையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். பாட்டி எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். எல்லாம் முடிந்து , ஏற்பாடு பண்ணி இருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி விட்டு, பாட்டியும் அப்பாவும் ஏறிக் கொண்டனர். அத்தையும் கணவரும் அவர்கள் வீட்டுக்கு. அப்புறம் வருவதாகக் கூறி அகன்றார்கள்.

வரும் வழியிலேயே முத்து சாஸ்திரிகளுக்கு சொல்லியாயிற்று. அவரே குளிர் பெட்டிக்கும் ஏற்பாடு செய்து விடுவார். சித்தப்பா ஊரிலிருந்து வர வேண்டும். தகவல் போயிருக்கும் இன்னேரம்.

----------------------------------------------

தாத்தா அப்போதெல்லாம் புத்தகங்கள் நிறைய படிப்பார். விகடன், குமுதம், கல்கி, முதற்கொண்டு இதயம் பேசுகிறது வரை எல்லாம் வாங்குவார். அதிலும் இதயம் பேசுகிறது , சரவணா ஸ்டோர்ஸாக மாறி சில காலம் கழித்து நின்று போகும் வரை வாங்கிக் கொண்டிருந்தார். வாசலில், மாடிக்குப் போகும் படிக்கட்டில் உட்கார்ந்து சுள்ளென்று வெயிலடித்தாலும் நுணுக்கி நுணுக்கிப் படித்துக் கொண்டிருப்பார்.கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி இனிமேல் படிக்க முடியாது என்ற நிலைக்கு வரும் வரை புஸ்தகம் வாங்குவதை விடவில்லை.

பேரன் பேத்திகள் மேல் பாசம் எல்லாம்  பெரிதாக ஒன்றும் கிடையாது. அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவரும் செய்ய மாட்டார். பெரிய பேரன் பெரிய பேத்தி மேல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் பாசம். மற்றவர்களை எல்லாம் அவரவர் பேர் சொல்லி அழைப்பவர் அவர்களை மட்டும் பேர் சுருக்கி அழைப்பார்.

அப்பாவுக்கு அலுவலகத்தில் வேறு பெயர். ஆனால் அவர் பிறக்கும் போது தமிழ்நாட்டுக்கு ராஜேந்திர பிரசாத் வந்தாராம். அதனால் நான்காவது அல்லது ஐந்தாவது பேராக அப்பாவுக்கு ராஜேந்திர பிரசாத் என்ற பெயரும் வைக்கப் பட்டது. சொந்தக்காரர்கள் எல்லாரும் பாட்டியும் , அவரை ராஜேந்திரா என்பார்கள். ஆபீஸிலும் நண்பர்கள் மத்தியிலும் சர்டிபிகேட் பெயர். அப்பாவை பிரசாத்து என்று அழைத்தது தாத்தா மட்டுமே.

தாத்தாவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. பெரிதாக ஒன்றும் இருக்காது. தினப்படி சங்க்யைகள் தான் பெரும்பாலும். காலையில் வெளி சென்றது, குளித்த நேரம், சாப்பிட்ட நேரம் இப்படி.மேட்ச் நடக்கும் நாட்களில் கிரிக்கெட் ஸ்கோர் குறிக்கப்பட்டிருக்கும்.

சில சமயம், அடுத்த நாள் எங்காவது ஊருக்குப் போவதாகத் திட்டம் இருந்தால், டைரியில் அடுத்த நாளுக்கான பக்கத்தில் முதல் நாளே இத்தனை மணிக்கு கிளம்பினேன், இத்தனை மணிக்கு சேர்ந்தேன். இத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தேன் என்று எழுதி வைத்து விடுவார்.வீட்டில் சண்டை வாக்குவாதம் நடந்தால் இன்னும் விசேஷம். " இன்று பிரசாத் என்னுடன் சண்டை போட்டான்.மனம் புண்படும்படி பேசினான்" என்று எழுதி வைப்பார்.

தான் அதை ஒரு பத்து முறை படிப்பார். எல்லாரும் படிக்க வேண்டுமென்பதற்காக நடு வீட்டில் டைரியை திறந்து வைத்து விட்டு காத்திருப்பார். இதெல்லாமே ஒரு வகையான அவரின் கவன ஈர்ப்பு டெக்னிக்குகள் என்று பாட்டி சொல்லித் தெரிந்து கொண்டோம்.

தாத்தாவுக்கு நாங்களெல்லாம் பிறந்ததிலிருந்தே காது சுத்தமாகக் கேட்காதென்பதால், அவர் பற்றிய சந்தேகங்களை எல்லாம் பாட்டியிடம் தான் கேட்போம்.சலிக்காமல் பதில் சொல்வாள்.

"பாட்டி... எப்பருந்து பாட்டி தாத்தாவுக்கு சொட்டையாச்சு?"

"எனக்கு பதினாலு வயசு இருக்கறச்சே கல்யாணம் ஆச்சு. உங்க தாத்தாவுக்கு இருபத்தஞ்சு. கல்யாணத்துக்கப்புறம் அஞ்சாறு வருஷம் தான் முடியிருந்தது. முப்பத்தஞ்சு வரதுக்குளேயே முழுசா ஆயாச்சு"

"பாட்டி... தாத்தாவுக்கு எப்ப பாட்டி காது கேக்காம போச்சு?"

"அதுவும் நாப்பது வயசுலயே போயாச்சு. எல்லாம் கேசரிமங்கலம் பரம்பரை சொத்து.அவருக்கு காது போனதால எனக்குத் தொண்டை போச்சு".

"பாட்டி...தாத்தாவுக்கு ஏன் பாட்டி ஒரு பல்லு கூட இல்ல?"

"சும்மா ஸ்கூலுக்கு போனோமா பாடம் சொல்லிக் குடுத்தோமா வந்தோமான்னு இருந்தாத் தானே? ஊன்னா மட்டையத் தூக்கிண்டு கிரிக்கெட் மேட்ச் விளையாடப் போறேன் பேர்வழின்னு கிளம்பிட வேண்டியது. ஒவ்வொரு தரமும் மூஞ்சி முகரைன்னு அடி பட்டுண்டு வந்து நிக்க வேண்டியது. அப்ப்டி பட்டு பட்டு தான் முடி போறதுக்கு முன்னாடியே பூராப் பல்லும் போயாச்சு".

நுணுக்கி நுணுக்கி டைரியில் கிரிக்கெட் ஸ்கோர் எழுதி வைப்பதன் காரணம் புரிந்தது.

இது எல்லாவற்றையும் விட தாத்தாவைப் பற்றி எப்போதும் ஆச்சர்யப் பட வைக்கும் விஷயங்களில் ஒன்று அவரது இனிப்புக் காதல்.

இனிப்பு என்றால் இனிப்பு அப்படியொரு இனிப்பு. குழந்தைகள் கூட அவ்வளவு இனிப்பு சாப்பிட மாட்டார்கள்.

தினமும் தவறாமல் குறைந்தது ஆறேழு பாக்கெட் ஜெம்ஸ், ஆறேழு பாக்கெட் பாப்பின்ஸ், இது போக தாத்தா பப்பரமின்ட் என்று குறிப்பிடும் சூடமிட்டாய், போதாதென்று வீட்டில் இருக்கும் சர்க்கரை, வெல்லம், என்று தினம் இனிப்பில் திளைப்பு. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மஞ்சள் பை ஒன்றை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்குப் போய் சரம் சரமாக ஜெம்ஸ் பாக்கெட்டுகள், கட்டு கட்டாக பாப்பின்ஸ் பாக்கெட்டுகள் என்று வாங்கி வந்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்வார்.

ஒரு எவர்சில்வர் டிபன் டப்பாவில் பாப்பின்ஸை பிரித்துப் போட்டுக் கொண்டு, காலைக்கு இவ்வளவு, மதியம் இத்தனை, ராத்திரி தூங்கும் போது இத்தனை என்று எண்ணி வைப்பார். ராத்திரி எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும், சரியான நேரத்துக்கு மருந்து சாப்பிடும் சீக்காளி போல், தூக்கத்திலேயே, அந்த டிபன் பாக்ஸை திறந்து ரெண்டு ஜெம்ஸை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சப்ப ஆரம்பித்து விடுவார்.

"பகவான் என்னத்துக்கு ராத்திரின்னு ஒண்ணு வெச்சு அந்த நேரத்துல தூங்கணும்னு வெச்சிருக்கான்? இல்லன்னா அந்த நேரத்திலயும் மனுஷா சமைக்கிறேன் சாப்பிடறேன்னு சொல்லிண்டு என்னத்தையாவது உருட்டிண்டு இருப்பான்னு தானே? இந்த மனுஷனுக்கு அதெல்லாம் எள்ளளவு கூட பொருந்தாது." என்பாள் பாட்டி.

சாப்பிடும் போது வடாம் பொறித்துப் போட்டால் தட்டருகே கொண்டு போகும் போதே டயட்டில் இருப்பவர் போல் பதறி ரெண்டே ரெண்டு போறும்டீம்மா..." என்று தடுப்பார்.

சாப்பிட்டு முடித்து கை அலம்பினதும் சுவற்றில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு எப்போதும் பாட்டியை அழைக்கும் குரலில் "டீ கங்கா.." என்பார்.அந்தக் குரலுக்கு என்ன அர்த்தம் என்று பாட்டிக்குத் தெரியும்,"க்கும்.. இதுக்கொண்ணும் குறைச்சலில்லை" என்று தோளில் முகத்தை இடித்துக் கொண்டு ஒரு பிளேட்டில் சுடச் சுட வடாம் நிரப்பிக் கொண்டு போய்க் கொடுப்பாள்.பல்லில்லாததால் ஊற வைத்து அதை ரசித்து சாப்பிடுவார் தாத்தா. இதை மட்டுமல்ல. எல்லா கடினமான மிட்டைகளையும் ஊற வைத்து நிதானமாகத் தின்பார்.

"ஒரு முட்டாய் சப்பி சாப்டாலே மேல் அண்ணமெல்லாம் பொத்து போய்டறது. இவர் எப்படித் தான் சலிக்காம இப்படி சாப்பிடறாரோ?" என்று அங்கலாய்ப்பாள் அம்மா.

எதற்கெடுத்தாலும் "டீ கங்கா" என்று பாட்டியைத் தான் அழைப்பார்.முதலில் தாத்தா எப்போது அழைத்தாலும் எதுவும் சொல்லாமல் பாட்டி போய் நிற்பாள். வயதாக ஆக , " எப்பப்பாரு என்ன ஏலம் வேண்டிக் கிடக்கு?" என்று சலித்துக் கொள்வாள். காரணம் இல்லாமல் இல்லை. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் தண்ணீர் டம்ளரைக் கூட அடுத்த அறையிலிருக்கும் பாட்டியை கூப்பிட்டு தான் எடுத்துக் கொடுக்கச் சொல்வார் தாத்தா.சலிப்பில்லாமல்?

வயது ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கும் திறன் குறைந்தது தாத்தாவுக்கு. முதலில் புத்தகம் வாங்குவது நின்று போனது.சிறிது சிறிதாக டைரி எழுதுவதும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போனது. பெரும்பாலான நேரம் ஓய்வெடுப்பதிலும் தூங்குவதிலும் கழிக்கத் தொடங்கினார் தாத்தா.

ஆனால் இனிப்பும் எண்ணெய்ப் பலகாரமும் சாப்பிடும் ஆசை மட்டும் கொஞ்சம் கூடக் குறையவில்லை. லேசாகத் தாளிக்கும் மணம் அதிகமாக வந்தால் கூட, " என்னை அருகில் கூப்பிட்டு " அம்மா சமையல் உள்ள ஏதானும் பட்சணம் பண்றாளா? வாசனை வர்றதே?"

"க்கும்... இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. மனுஷா வீட்ல தாளிக்க தான் மாட்டாளோ? நன்னாத் தான் ஆச்சு போ" என்பாள் பாட்டி. அறுபது வருட வாழ்க்கையின் சலிப்புகள், ஏமாற்றங்கள், கோபங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியிடமிருந்து வெளிப்பட ஆரம்பித்தன.

தாத்தாவிடமும் நிறைய மாற்றங்கள். சிறு நீரை வேட்டியிலேயே ஒழுக்க ஆரம்பித்தார். பாத்ரூம் போகும் போது கதவை மூட மறந்து போய் அப்படியே நிற்பார்.பாட்டியின் சலிப்பு அதிகமாகத் தொடங்கியது.

வேட்டியில் ஆங்காங்கே மஞ்சள் கறைகள் தென்படத் துவங்கின.மல ஜலம் கழித்து விட்டு சரியாகக் கழுவிக் கொள்ளாமல் வீட்டுக்குள் வரத் தொடங்கினார்.போகப் போக நிலைமை இன்னும் மோசமானது. மலம் கழிக்க வேண்டும் போலிருந்தாலும் காரணமே இல்லாமல் அடக்கிக் கொள்ளத் தொடங்கினார். அதைக் கைகளால் எடுத்து வீடு முழுக்க ஆங்காங்கே போடத் துவங்கினார். அதை தேடிப் பிடித்து சுத்தம் செய்வதே பாட்டிக்கு வேலை ஆகிப் போனது.பல சமயங்களில் தாத்தாவைக் கண்டாலே வெடித்துக் கொந்தளிக்க ஆரம்பித்தாள் பாட்டி.

நிலமை கை மீறிப் போகவே என்ன பண்ணுவதென்று தெரியாமல் எல்லாரும் சங்கடத்தில் ஆழ்ந்து, கடைசியில் அவரை ஹோமில் சேர்ப்பது தான் ஒரே வழி என்று முடிவு செய்யப் பட்டது. பாட்டி  தான் முழுசாக சப்போர்ட் பண்ணினாள்.யார் யாரோ என்னென்னவோ பேசினாலும் ஒதுக்கினாள்.

ஹோமில் சேர்த்ததுமே நடமாட்டம் குறைந்து போனது தாத்தாவுக்கு. சாக்லேட் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார்.அவ்வப்போது உடல்நிலை சீரியசாகி மீண்டார். அப்ப்டி ஒரு ஞாயிறு காலை நடந்தது தான் முதலில் சொன்ன விஷயம்.

----------------------------------------------------------------------

தாத்தாவை வீட்டுக்குக் கொண்டு வந்தாயிற்று. குளிர் பெட்டி வந்திருந்தது. அதற்குள் தாத்தாவைக் கிடத்தி ஸ்விட்ச்சைப் போட்டு வைத்தேன். பாட்டியும் அம்மாவும் அருகில் அமர்ந்து கொண்டனர். அப்பா போனில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். லோக்கலில் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கினர்

பாட்டி என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறாள் என்று அறியவே முடியவில்லை. அறுபது வருஷ வாழ்க்கை. தாத்தா அவ்வளவுக்கொன்றும் உதாரண புருஷர் இல்லை. எத்தனை வலிகள்,  எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை புறக்கணிப்புகள், சண்டைகள், அதிகாரங்கள், ஏய்ப்புகள்... அத்தனையும் தாங்கிக் கொண்டு திடமாக இருக்கிறாள்.

என்ன யோசித்துக் கொண்டிருப்பாள்? " என்னை விட்டு விட்டு எனக்கு முன் போய் விட்டாயே என்றா? எப்படியெல்லாம் படுத்திய நீ இப்படிக் கிடக்கிறாயே என்றா? இல்லை கண்ணுக்குத் தெரியாத ஒரு நிம்மதியின் சுவடு அவள் மனதில் படிந்திருக்கிறதா? அனுமானிக்க முடியவில்லை.

மெல்ல அவள் அருகில் சென்று குனிந்து அவள் தலையைத் தடவி, " பாட்டி " என்றேன். தொண்டை அடைத்தது.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் கேட்டாள் " என்ன கண்ணா? பசிக்கறதாடா? ஏதானும் சாப்பிடறியா?"...


- தென்றல் - செப்டம்பர் 2014