Sunday, August 24, 2014

ஆயா வடை சுட்ட கதை


ரைட். நிறையப் பேர் அஞ்சான் பாதிப்பில் இந்தப் படத்தைப் பார்த்ததால் இது பெட்டராகத் தெரிந்ததாகக் கூறக் கேள்வி. நான் அஞ்சான் பார்க்கவில்லை ( சிக்க மாட்டோம்ல ). ஸோ அஞ்சான் ( எத்தனை அஞ்சான்யா?) எபக்ட் இல்லாமல் பார்த்த இந்தப் படம் எப்படி இருக்கிறதென்று நான் சொல்கிறேன்.

12B  படம் வந்த புதிதில் ஒரு வதந்தி காற்றில் உலவிற்று. வித்தியாசமான கதை பண்ணிய ஜீவாவுக்கு கடைசியாக படத்தை எப்படி முடிப்பதென்று தெரியவில்லையாம். கடைசியில் முடிவின் முடிச்சை பார்த்தி தான் கொடுத்து முடித்து வைத்தாராம் ( மறுபடியும் எத்தனை முடிய்யா?)

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஸோ அண்ட் ஸோ பழைய மொழி போல் ஜீவாவுக்கு க்ளைமேக்ஸ் பிடித்துக் கொடுத்த பார்த்திக்கே இந்தப் படத்தில் பிரச்னை. ஒரே வித்யாசம், இவர் க்ளைமாக்ஸை கச்சிதமாகப் பிடித்து விட்டார். முதல் பாதியும் பட்டாசு. இடைப்பட்ட ஒரு மணி நேரத்தை என்ன செய்வதென்று தெரியாமல் என்னென்னவோ எழுதியிருக்கிறார்.

வழக்கமாக இவர் படங்களில் இவர் சிந்தனையில் உதித்த துணுக்குகளையும் கருத்துகளையும் துருத்திக் கொண்டு தெரியாமல் அழகான தோரணமாகக் கட்டி விடுவார் ( இவன் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் வசன கருத்துக்கள் திருஷ்டி பரிகாரம். என்னா அடி...... பச்ச குதிர, வித்தகனெல்லாம் நல்ல வேளை நான் பார்க்கவில்லை )

இந்தப் படத்தில் தோரணமாகக் கட்டியவை எல்லாமே  கொஞ்சம் தரமான துணுக்குகள். ஆனால் அதை முதல் பாதி முடிகிற வரை தான் இழுக்க முடிந்திருக்கிறது பாவம். ( இன்னும் ஒரு வருடம் கழித்து இந்தப் படம் எடுத்திருந்தால் ரெண்டாவது பாதிக்கும் துணுக்குகள் சேர்ந்திருக்கும் )

In a nutshell

முதல் பாதி – வாஹ்.....

ரெண்டாம் பாதி – ஹாவ்வ்வ்வ்........( கொட்டாவி தாங்க )
 


Wednesday, August 13, 2014

தமிழுக்கும் அமுதென்று பேர்


டேபிள் மேல் கிடந்த சிகரெட் பாக்கெட்டை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தார் அமுதன். சிகரெட்டின் புகை நெஞ்சுக் குழிக்குள் ஆழமாக இறங்குகிறாற் போல் எண்ணிக் கொண்டார். கற்பனை.. மேலும் மூச்சை உள்ளிழுத்தார் அமுதன்.கண்கள் மூடிக் கிறங்கியிருந்தன. இந்த மாதிரி கண்களை மூடிக் கொண்டு யாருமற்ற தனிமையில் நெஞ்சுக் குழிக்குள் புகையைப் படர விடுவது அவருக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. இது மாதிரி சந்தர்ப்பங்களில் சுற்றிப் படர்ந்து கலந்திருக்கும் தனிமை , சிகரெட் புகைக்கு ஒரு தனி சுகத்தைக் கூடுதலாய் அளித்து விடுகிறது.

இதற்கு முந்தைய கடைசி சிகரெட்டை எப்போது பிடித்தோம் என்று அவருக்கு சரியாக நினைவிருக்கவில்லை. எப்போதாவது தான் தமிழ் ஓரிரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் வீட்டிலிலாதிருக்கும் சந்தர்ப்பங்கள் அமையும். அவள் உள்ளூரில் இருந்தால், வீடு திரும்ப வெகு நேரமானாலும் அவர் சிகரெட்டைத் தொடுவதில்லை.அந்த மணம் வீட்டை விட்டகல வெகு நேரமாகும் என்பது அவர் எண்ணம். தமிழுக்குத் துளி சிகரெட் வாடை வந்தாலும் பிடிக்காது.

அதற்காக உக்கிரமாகி விடவும் மாட்டாள் உடனே. அந்த நாள் தேதி கணம் எல்லாவற்ரையும் மனதில் பதிய வைத்துக் கொள்வாள்.பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏதேனும் வாக்குவாதம் வருகையில் எந்த சமயத்தில் அதைக் கூறினால் அவர் வாயைப் பட்டென்று அடைக்க முடியுமோ அந்த சமயம் சரியாக நாள் நேரத்தோடு அவர் செய்த தப்பை சொல்லிக் காட்டிக் குத்துவாள்.

"ஏண்டா... எத்தனை முறை சொல்லிருக்கேன்... மழை பேஞ்சா எனக்கு கால் பண்ணுனு? ஏண்டா இப்படி என் உயிரை வாங்கற?"

...........

"டேய்... உன்னத் தான். பேசிட்டே இருக்கேனே.. காதுல விழுதா இல்லையா? மழைல நனைஞ்சு ஜுரம் வந்தா என்னத்துக்காறது?"

..........

"சரி... சரி... சர்ரீஈ..... என் தப்பு தான். ஆசைக்கு ஒண்ணு அதிகமா பிடிக்க கூடாதா... அந்த உரிமை கூட எனக்கில்லையா?

.............

சரி டா... படுத்தாத. நான் அந்த தப்பை இனிமே பண்ண மாட்டேன்.இனிமே நீயும் மழைல நனைஞ்சு வராதயேன் ப்ளீஸ்..."

"பாக்க தானே போறேன்.. நீ என்ன பண்றன்னு" என்று முடிப்பாள் அந்த உரையாடலை.

நினைத்தவுடன் மெல்லச் சிரித்துக் கொண்டார் கண்கள் மூடி.புகை கமறியது.அல்லது அப்படி எண்ணிக் கொண்டார்.

எங்கிருந்து வந்தது இதெல்லாம்? அவரிடமிருந்து தான். அவரும் அதையே தான் செய்வார்.அப்படியே அவளுக்க் வந்திருக்கிறது. பிறப்பாலெல்லாம் வந்தாற் போல் தெரியவில்லை.இவரைப் பார்த்துப் பார்த்து தான் வந்திருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் அப்படியே அவரை மாதிரி தான். அதில் அவருக்கு எவ்வளவோ பெருமை. ஆனால் அவள் முன்னால் மட்டும் அவர் குழந்தையாகவே இருக்க விரும்புவார்.

எப்போதும் அவர்கள் இருவரும் போட்டுக் கொள்ளும் சண்டைகள் சிறு பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகள் போலவே இருக்கும். நான் சொல்லி நீ கேக்கலையே, நீ சொல்லி நான் ஏன் கேக்கணும் என்பது தான் பெரும்பாலும் சண்டைகளின் அடிநாதம். கணவன் மனைவிக்குள் மட்டும் தான் ஊடல் வர வேண்டும் என்று யார் வகுத்து வைத்தது?

தமிழ் எல்லாவற்றிலும் எப்போதும் தெளிவு. எல்லாவற்றிலும்.

"என்னப்பா இங்க உக்காந்து என்ன பண்ற..என்னத்துக்கு என் மூஞ்சிய அடுப்புல வெச்ச பால் மாதிரி பாத்துண்டு இருக்க? மணி என்னாவுது?தூங்கப் போலியா?"

"டேய்.. நான் ஒண்ணு கேக்கணுமே உன் கிட்ட?"

" கேக்கறதுக்கு இப்ப தான் நேரம் பாத்தியா... ஏம்ப்பா இப்படி... நடுராத்திரில மொக்க போடற... சரி கேளு"

.....

"கேளேம்ப்பா" சலிப்புடன்.

"வொய் டோண்ட் யு ஃபால் இன் லவ்?"

விரிந்த கண்கள். அப்பட்டமான ஆச்சரியம். " என்னப்பா பேத்தறே?"

"இல்லடா... "

"என்ன சொல்லு.... பேச வர மாட்டேங்குதா?"

"இரு டா... ட்ரை பண்றேன்ல"

"ம்ம்"

"இல்லடா... இவ்ளோ நாள் உன்ன பெருசா வளர்த்ததா எல்லாம் நான் நினைக்கல. ஜஸ்ட் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கோம். உனக்கு நல்ல பையனா தேடி கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு பொறுப்பிருக்கான்னு தெரில. ஆனா என்னை விட நீ பொறுப்புன்னு தெரியும். அதுனால...."

"அதுனால?"

"அதுனால நீயே பெட்டரான ஒரு பையனை செலக்ட் பண்ணினா என்ன?... அதான்....."

"ஏம்ப்பா ராத்திரில எழுப்பி இப்படி பிராணனை வாங்கறே?சில்லியா பெனாத்தாதே...காலையில ஆபீஸ் போகணும். போய்ப் படுத்தாம படு". அவள் சுடு சொற்கள் சொன்னாலும் கூட அதையும் இனிக்கிறாற் போல் தான் சொல்வாள் அவருக்கு. இப்படியெல்லாம் அவள் புரட்டி எடுக்கும் போது அவருக்கு ஆனந்தமாய் இருக்கும்.

எவ்வளவு சீரியசான விஷயம் பேச முயற்சி செய்து கொண்டிருக்கையில் சட்டென்று அனாயாசமாக நகைப்புக்குரியதாக்கி விடுகிறாள்...

ஆனால் எல்லா சமயங்களிலும் பள்ளிப் பிள்ளைகள் போல் தத்துப் பித்தென்று பேசிக் கொண்டிருப்பதுமில்லை இருவரும்.

"நீ ஏம்ப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல?"...

"அது.... அதெதுக்குடா இப்ப.. விடு..."

"ம் ஹூம்.. இப்ப நீ சொல்ற...."

"இன்னொரு கல்யாணம்... திரும்ப ஒரு பொண்ணு கூட முதல்ல இருந்து....அவ மேல அபெக்ஷன் இல்லன்னாலும் இருக்கற மாதிரி காட்டணும். எது செய்யும் போதும் அவளுக்காக வேற யோசிக்கணும். தவிரவும் செக்ஸ் ஹாஸ் நெவர் பீன் மை ப்ரியாரிட்டி.அதைத் தவிர தேவைன்னு பாத்தா மனசுல இருக்கறத ஷேர் பண்ணிக்க ஒரு ஆள்.நாம பேசறத கேக்க. நம்ம கூட பேச. வீட்டுக்கு வரும் போது நாம தனியா இல்லைங்கற ஃபீலைத் தர்ற ஒரு ஜீவன். அந்த மாதிரி ஒரு கம்பானியன் கொஞ்சம் அதிக புத்திசாலியா இருந்தா ரொம்ப சந்தோஷம். அந்த வகையில நான் செம்ம லக்கி. எனக்கு தான் நீ இருக்கியே"

"ஐயே...வழியுது.. தொடச்சிக்கோ"...

மீண்டும் சிரித்தார்.

புரை ஏறியது. தலையில் தட்டிக் கொண்டார்.

தமிழுக்கு தாடி இருந்தால் சுத்தமாய்ப் பிடிக்காது. தினமும் ஷேவ் செய்து மழுங்க இருக்க வேண்டும். தினமும் சோதனை உண்டு.ஏமாற்ற நினைத்தால் பட்டென்று கன்னத்தில் அடியும் உண்டு. தன்னிச்சையாய் பச்சை படிந்து போயிருந்த தாடையைத் தடவிக் கொண்டார். ஒரு நாள் ஷேவ் பண்ணாமல் விட்டதால் நரைத்த முரட்டு தாடி லேசாக எட்டிப் பார்த்தது. தமிழ் வெளியூர் சென்றால் ஷேவ் பண்ண மாட்டார். அப்படியே விட்டு விடுவார்." அவள் வருவதற்குள் செய்து கொண்டு விட வேண்டும் " மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டார்.அதை நினைத்து அவரே சிரித்துக் கொண்டார். திரும்பவும்.

வீட்டின் பின்பக்கம் ஏதோ சலசலப்பு கேட்டது. எழுந்து போய் ஜன்னல் வழியாய்ப் பார்த்தார்.யாரும் தெரியவில்லை. திரும்பி வந்து ராக்கிங் சேரில் அமர்ந்து கொண்டார்.பக்கத்து வீட்டுக் கரும்பூனை டாலியாயிருக்கும். அதற்கு தான் எப்போது பார்த்தாலும் தோட்டத்தில் ஆட்டம்.

அவரும் தமிழும் சேர்ந்து தோட்டம் அமைப்பதே ஒரு அலாதி அனுபவம். கன்றுகள் வாங்குவது , உரம் வாங்குவது, நிலம் பதப்படுத்துவது, செடிகளை நட்டு நீரூற்றி பராமரிப்பது என்று இருவருக்கும் அது ஒரு தனி உலகம்.எட்டு வயதில் தானே நட்டு வளர்த்த செம்பருத்திச் செடியில் முதல் பூ பூத்ததும் தமிழ் போட்ட ஆட்டம் இருக்கிறதே... காலத்துக்கும் மறக்க முடியாது.அன்று தமிழ் அவரை ஓட்டலுக்கு அழைத்துப் போய் ட்ரீட் கொடுத்தாள். அவர் செலவில் தான். இருந்தாலும் அது முக்கியமா என்ன?

சட்டென்று சுய நினைவுக்கு வந்தவர், சுற்றும் முற்றும் பார்த்தார். ஐந்து நிமிதங்கள் எங்கேயோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். தமிழ் இல்லாத தனிமை முகத்தில் அறையத் துவங்கியது. நினைவுகளில் மூழ்கிக் கிடந்த வரை சுடாத தனிமை இப்போது சுட்டது.

இவ்வளவு நேரமும் அதைப் பார்க்கவே கூடாதென்று நினைத்துத் தான்  முகத்தை வேறு பக்கம் திருப்பி வைத்துக் கொண்டு அது அங்கிருப்பதையே லட்சியம் செய்யாத மாதிரி உட்கார்ந்திருந்தார். மனதை வேறு நினைவுகளுக்கு வலிய வலியத் திருப்பிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் தான் கண்ணெதிரே இருக்கும் அதைத் தவிர்ப்பது? வேறு வழி இல்லாமல் மெல்லப் பார்வையைத் திருப்பிப் பார்த்தார்

அவர் அமர்ந்திருந்த சேருக்குக் கொஞ்சம் தள்ளிக் கீழே... வேட்டி கலைந்து கிடக்க கண்கள் அரை செருகலாகக் கிடக்க வாய் லேசாகத் திறந்து கிடக்க, கைகள் பரந்து கிடக்க, கீழே கிடந்தது.... அவர் உடல்.

யார் வந்து கதவைத் தட்டப் போகிறார்கள்? யார் வந்து முதலில் பார்க்கப் போகிறார்கள் தன் உடலை? யார் தமிழுக்குத் தகவல் கொடுக்கப் போகிறார்கள்? தமிழ் வர எவ்வளவு நேரமாகும்? அல்லது நாளாகுமா? கேள்விகளுக்கெல்லாம் அவரிடம் பதிலில்லை.

ஆனால் எதிர்பார்ப்பு மட்டும் தான் மிச்சமிருந்தது. பார்வையை வாசலை நோக்கித் திருப்பியவர் கன்னத்தில் கை வைத்துக் காத்திருக்கத் தொடங்கினார். எப்படியும் தமிழ் வந்து விடுவாள்.

Monday, August 11, 2014

ஒலகத் தரப் படமும் உள்ளூர் மாக்கானும்


ரைட். இந்தப் படம் ரிலீஸான போது பார்க்கத் தோதுப்படவில்லை.அதற்கப்புறமும் அமையவில்லை.

இன்று தான் டி வியில் போட்டார்கள். சரி ஊரே கொண்டாடிச்சே அப்படி இதில் என்ன தான் இருக்கு என்று பார்த்தேன்.

படம் பார்க்கும் போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. இந்தப் படம் வெளி வந்த போது விகடனில் விமர்சனம் செய்திருந்தார்கள். 52 மார்க் கொடுத்திருந்ததாக ஞாபகம்.

அதற்கு அடுத்த வாரம் படத்தின் டைரக்டர் விகடன் விமர்சனத்தின் மீதான தன் விமர்சனங்கள் என்று ரெண்டு பக்கம் விகடனிலேயே எழுதி இருந்தார். அதில் அவர் சொன்ன முக்கியமான பாயின்ட். தற்கால கல்வி முறை எப்படி எல்லாம் குழந்தைகளை பாதிக்கிறது, அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட ஒன்றும் மோசமில்லை போன்ற கருத்துகளை நான் என் படத்தில் சொல்லி இருக்கிறேன். அது ஏன் விகடன் கண்ணில் படவில்லை என்று கேட்டிருந்தார்.

படம் முழுக்கப் பார்த்ததில், எனக்குத் தெரிந்து டைரக்டர் தான் சொன்னதாக சொன்ன கருத்து எனக்குத் தெரிந்தது, கடைசி சீனில் மட்டும் தான். அது கூட அவர் சொல்வது, பிரைவேட் ஸ்கூலிலிருந்த நல்ல டீச்சர் கவர்மெண்ட் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்து விட்டதால் தன் பிள்ளையை அங்கு சேர்க்கிறேன் என்று.

மற்றபடி, உலக சினிமா ஆர்வலர்களும், மாற்று சினிமா ஆதரவாளர்களும் எகிறிக் குதித்து வந்து மூக்கிலேயே குத்தினாலும் சரி - என்னைப் பொறுத்த வரையில் இந்தப் படம் முழுக்க முழுக்க தப்பான விஷயங்களை ஓவர் உணர்ச்சிக் குவியலாக Glorify பண்ண மட்டுமே செய்கிறது. இதற்கு முன்னால் இந்த மாதிரி ஊரே கொண்டாடிய , ஆனால் மிகத் தப்பான ஒரு விஷயத்தை சென்டிமென்ட் போர்வைக்குள் புகுந்து கொண்டு சீராட்டிய படம் " காதல்".

அதற்கப்புறம் நான் பார்த்து இது தான்.

உடனே கொலை கொள்ளை எல்லாம் Glorify பண்ணிப் படங்கள் எடுக்கவில்லையா? என்னவோ இதற்கு மட்டும் எகிறுகிறாயே என்று சிலர் கேட்கலாம்.

அய்யா.. எதை வேண்டுமானாலும் தப்பாகக் கூட Glorify பண்ணிப் படம் எடுங்கள். ஆனால் குழந்தைகளின் உலகத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று இந்த மாதிரி தப்பான உதாரணங்களைக் காட்டுவது ரொம்ப ஆபத்தானது.

குழந்தை ஆசைப்பட்டுப் பல விஷயங்கள் கேட்கும். அதில் எது முடியும் முடியாது, எது சரி தப்பு என்று கூட சொல்லிப் புரிய வைக்காமல் பைத்தியம் போல் அலையும் பாசம் பாசமே அல்ல. குருட்டு அன்பு. படத்தைப் பார்க்கும் போது அந்த ஹீரோவையும் அந்தக் குழந்தையையும் தவிர சுற்றி இருக்கும் எல்லா கேரக்டர்களுமே யதார்த்தமாக இருப்பது போல் தோன்றியது எனக்கு.

குழந்தை மந்தமாக இருப்பது தப்பில்லை. ஆனால் படத்தில் அது பேசும் வசனங்களையும் கேட்கும் கேள்விகளையும் பார்க்கும் போது ஒன்றே ஒன்று தான் தோன்றியது. படத்தில் ஒரு கட்டத்தில் படத்தில் குழந்தையின் அம்மா கோவத்தில் சொல்வாள் - " லூஸாட்டம் பேசாதே" என்று. அதேதான்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் அம்மாவும் ஒரு கட்டத்தில் கமெண்டடித்தாள். " நல்ல அப்பா நல்ல பொண்ணு. பொண்ணை வளர்க்கத் தெரியாம வளர்த்துட்டு செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ கிளம்பிப் போயிட்டான் கோச்சிண்டு. இப்போ பாரு அம்மா தானே கஷ்டப் படறா அந்த பொன்ணை வெச்சிண்டு?"

பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்களுக்குத் தான் தெரியும் சினிமாவில் காண்பிக்கிறாற் போலெல்லாம் பிள்ளைகளை வளர்த்தால் அவ்வளவு தானென்று.

இது தான் உலகத் தரப் படமா?

சொல்வீர்களா? நீங்கள் சொல்வீர்களா?

Saturday, August 9, 2014

நண்பேண்டா.. நட்புடா... ( 2 )அப்போ தான் திடீரென்று ஒரு விஷயம் உறைத்தது." டேய்... நீங்கள்லாம் வந்தப்போ ஓனர் பாத்தாரா?" என்றேன்.

இல்லை என்கிற மாதிரி தலையாட்டினான் பாலாஜி.

"எப்படிடா வந்தீங்க?"

" பைக்ல தான்". கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. " பைக் எங்கடா?"

"கீழ கேட்டுக்கு வெளிய தான் நிக்குது"

செத்தோம் என்று நினைத்துக் கொண்டே வெளியில் போய் எட்டிப் பார்த்தேன். கேட்டுக்கு வெளியே மாடு மாடாய் மூன்று பைக்குகள். ஓனர் கீழ் வீட்டிலிருந்து சும்மா வெளியே வந்து லேசாக எட்டிப் பார்த்தாலே போதும்.

அதற்குள் இவர்கள் எங்கோ கிளம்பினார்கள்." எங்கேடா போறீங்க?" என்று கேட்டதற்கு, " ரூம் தேடப் போறோம்டா" என்று அஸால்ட்டாகக் கிளம்பினார்கள்.

சட்டென்று அவர்களை தடுத்து நிறுத்தி விட்டு வெளியில் ஓடிப் போய் எட்டிப் பார்த்தேன். ஓனர் வெளியில் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு கள்ளக் காதலனை யாருக்கும் தெரியாமல் வழியனுப்பும் கள்ளக் காதலியைப் போல் ( என்னா உதாரணம். கருமம்டா சாமி ) அவர்களை வெளியே அனுப்பினோம்.

அடுத்த பயம். அவர்கள் திரும்பி வரும் போது ஓனர் பார்த்து விடாமலிருக்க வேண்டும். அவர்கள் கொண்டு வந்த பைகளெல்லாம் அங்கங்கே கிடந்தன. அந்த சில மணி நேரங்கள் நாங்கள் இருந்த மனநிலைக்கு சில்க் ஸ்மிதாவே நேரில் வந்து பர்பார்மென்ஸ் கொடுத்திருந்தால் கூட வாசலைத் தான் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்.

நல்லவேளை. ஓனர் பார்த்து விடும் பயம் பத்து மணி தாண்டியதும் கொஞ்சம் நீங்கியது. அவர் ஒன்பதரைக்கெல்லாம் கதவைப் பூட்டி விட்டு படுத்து விடுவார்.

பதினோரு மணிக்கு சாவகாசமாக வந்தார்கள். வாசலிலேயே அவ்ர்கள் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கீழே ஓடினான்.

வயிற்றில் புளி அது பாட்டுக்குக் கரைந்து கொண்டிருந்தது, மழை வேறு தூற ஆரம்பித்து விட்டது.நாங்கள் உள்ளே வந்து விட்டோம்.

வெளியே எட்டிப் பார்க்கப் பயம். வெளியே போன இவன்களும் கீழே போன சுரேஷும்  திரும்ப வந்தார்கள் லேசாகத் தூறலில் நனைந்து.

 கொஞ்சம் பயம் தெளிந்தது. வெளியே போய் எட்டிப் பார்த்தேன்.கேட்டுக்கு முன்னால் பைக்குகளைக் காணவில்லை. சின்ன நிம்மதி. எங்கடா என்பது போல் சுரேஷைப் பார்த்தேன்.

அவனும் வெளியில் வந்து எட்டிப் பார்த்தான். அவன் பார்வை போன திசையைப் பார்த்தேன். கேட்டுக்குள்ளே மரத்தடியில், படிக்கட்டுக்கு கீழே ஓனர் பார்த்தால் சட்டென்று தெரியாத மாதிரி மூன்று பைக்குகளும் சாதுவாக நின்றிருந்தன.பயமும் நிம்மதியும் சேர்ந்து வயிற்றை என்னவோ செய்தன.

ஒரு மாதிரியாகத் தூங்கி விட்டோம். அல்லது தூங்கின மாதிரி ஆளாளுக்கு சீன் போட்டுக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள். ஞாயிற்றுக் கிழமையானாலும் க்ளாஸுக்குப் போகிறாற் போல் ஆறு மணிக்கு எழுந்தாயிற்று, அவர்கள் ஒருத்தனும் எழுந்திருக்கவில்லை. வழக்கம் போல் வாசலில் வந்து நின்று சோம்பல் முறிக்கும் போது தான் பார்த்தேன். ஓனர் மெல்லப் படியேறி வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் பலான படத் தியேட்டர் வாசலில் அப்பாவிடம் மாட்டிக் கொண்ட பையன் மாதிரி ஆகி விட்டது நிலமை ( உன் உதாரணத்துல தீய வெக்க )

வேகமாக உள்ளே ஓடி எல்லாரையும் எழுப்பினேன். மூன்று பேரும் எழுந்தார்கள்,. ஓனர் வருவதைச் சொல்லி அவசரமாக அவர்களை பால்கனிப் பக்கம் தள்ளினேன். இந்த ப்ரசாத் கடங்காரன் மட்டும் எழுந்திருக்கவில்லை. ஓனர் வந்து விட்டார். இவருக்கு இன்ஸ்பெக்ஷன் வருவதற்கு இன்றைக்கு தான் நேரம் கிடைத்ததா?

உள்ளே வந்து நின்று முன்னும் பின்னும் நடந்தவாறு நோட்டமிட்டார். மசமசவென்று சரியாக விடியாத காலை.ஏதோ கேள்வி கேட்டார். எல்லாம் தலைக்கு மேலே போனது. காதில் ஒன்றும் விழவில்லை.

சோதனை மேல் சோதனையாக ப்ரசாத் அப்போது தான் எழுந்து வந்தான். உள்ளறையில் நின்றபடி சோம்பல் முறித்தான். ஓனர் அவனைப் பார்த்தார். மீண்டும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தார். பின் மெல்ல வெளியேறி படியிறங்கத் தொடங்கினார்.

நம்ப முடியாத அதிசயத்தைப் பார்த்தது போல் நான் , பாலாஜி, சுரேஷ் மூவரும் பேஸ்தடித்து நின்றோம். அப்புறம் தான் விஷயம் புரிந்தது. ப்ரசாத்தும் எங்கள் ரூம் மேட் தினேஷும் ஆறரை அடி உயரம். இவனைப் பார்த்து அவன் என்று நினைத்துக் கொண்டு போய் விட்டாரர்.


தினேஷ் லுங்கியை இறுக்கிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தான்.அந்த மூன்று பேரும் எங்கே என்று பார்த்தேன். பால்கனி சன்ஷேடில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டிருந்தார்கள்,

பல் கூட விளக்காமல் தம்மடிக்கிறான்கள். என்ன சுத்தமோ என்ன எழவோ?

மீண்டும் ரூம் தேடப் போகிறேன் என்று கிளம்பினார்கள். மீண்டும் முதல் நாள் ராத்திரி பண்ணிய எக்சர்சைஸையே ரிப்பீட் .

ஒரு நல்ல ஞாயிற்றுக் கிழமை அநியாயமாக வீணாகிக் கொண்டிருந்தது.

மதியம் போல் வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்ன வார்த்தைக்கு ப்ரசாத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டிருப்பேன். அவன் ஆணாகப் போனதாலும் அவ்வளவாக நன்றாக இல்லாததாலும் அதை செய்யவில்லை. " ரூம் கிடைச்சிடுச்சு மச்சி" இது தான் அவன் சொன்ன அமுத வாக்கியம்.

சட்டென்று லக்கேஜையெல்லாம் எடுத்துக் கொண்டு தடம் தெரியாமல் கிளம்பி விட்டார்கள்.

நெஞ்சுக்குள் அப்படி ஒரு நிம்மதி.அதே நேரம் ஒரு கேள்வி. " இவனுங்களுக்குனு எவனாவது மாட்டறானே? எவன் ரூம் கொடுத்திருப்பான்?"

அதே மனசின் லெப்ட் பக்கம் அதற்கு பதிலும் சொன்னது. " எவனாயிருந்தாலும் சரி. நிச்சயம் அவன் இளிச்ச வாயன் தான் - உங்களை மாதிரி.

Friday, August 8, 2014

நண்பேண்டா... நட்புடா.....

கல்லூரி வரைக்கும் சிறு நகரமான எங்கள் ஊரிலேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டியாகி விட்டது. சென்னை எந்த திசைப் பக்கம் இருக்கிறதென்று கூட தெரியாது. இது படி இது படிக்காதே என்று வழிகாட்டவெல்லாம் யாரும் கிடையாது. சரி, படித்தது பி காம். ஒன்று CA படிக்க வேண்டும் அல்லது CWA. ( அப்போ தெரிஞ்சிருந்தது அது ரெண்டு தான்).

CA படித்தால் மூன்று வருஷம் ஆர்ட்டிக்கிள்ஸ் பண்ண வேண்டும் என்று கேட்டதுமே அஸ்தியில் ஜுரம். பேசாம CWA சேர்ந்துடுவோம் என்று முடிவு எடுத்தாயிற்று. எல்லா விஷயங்களையும் போல் இதிலும் மூன்று பேர் கூட்டுச் சேர வந்தார்கள். என்னை நம்பி. பாவம்.

CWA இன்ஸ்டிட்யூட்டிலேயே க்ளாஸ் சேர்வதென்று தீர்மானம். அடுத்த பிரச்னை தங்குவது. மாமா பெரிய மனசு பண்ணி அவர் ஏரியாவிலேயே ஒரு ரூம் பார்த்துக் கொடுத்தார். அந்த ஏரியா க்ரோம்பேட்டை. க்ளாஸ் எக்மோரில்.

ஓனர், நாங்கள் சின்னப் பசங்க ( அப்போ ) என்பதாலோ என்னவோ கொஞ்சம் அதிக அதட்டலாகவே பேசினார். கண்டிஷனெல்லாம் போட்டார்.சும்மா ப்ரெண்ட்ஸையெல்லாம் ரூமுக்கு கூட்டிட்டு வரக் கூடாது. நீங்க நாலு பேர் மட்டும் தான் இருக்கணும்கிறது முக்கியமான ரூல்.

"நாங்க யாரய்யா கூட்டிட்டு வரப் போறோம். எங்களுக்கே ஒருத்தனையும் தெரியாது"  என்று அப்போது நினைத்தோம்.

எல்லா ப்ளாக் அண்ட் வொயிட் படங்களிலும் வருவது போல் அப்போது விதி எங்கள் நாலு பேரின் தலைக்கு பின்னால் நின்று கொண்டு பி.எஸ். வீரப்பா சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு தெரியவில்லை ( தலைக்கு பின்னால் இருந்ததில்லையா? அதான் )


காலையில் ரெண்டு மணி நேரம் மட்டும் க்ளாஸ். ஒன்பது மணி க்ளாஸுக்கு ஏழு மணிக்கு ரூமிலிருந்து கிளம்பி ட்ரெயின் பிடித்தால் எட்டேகால் சுமாருக்கு எக்மோர். அப்படியே பொடி நடையாய் கென்னத் லேன் வழியே போய் அங்கிருக்கும் ஒரு ஆப்பக் கடையில் நாஷ்தா பண்ணி விட்டு இன்ஸ்டிட்யூட்டுக்கு நடை. பதினோரு மணிக்கு க்ளாஸ் முடிந்ததும் அடியைப் பிடிடா என்பது போல் திரும்பவும் எக்மோர்.

இது தான் ரொட்டீன்.

நாலு பேரில் பாலாஜி மட்டும் கொஞ்சம் வித்தியாசம். அடிக்கடி தனியாக எங்கேயாவது போய் விட்டு வருவான். கேட்டால் வாக்கிங் போய்ட்டு வந்தேன் என்பான்.அவனிடம் மட்டுமே அப்போது மொபைல் இருந்தது.
ஒரு மாதிரியாக செட்டில் ஆகி விட்டிருந்தோம். அப்போது தான் ஒரு நாள் ராத்திரி எட்டரை மணி சுமாருக்குபாலாஜிக்கு ஒரு போன் வந்தது.எங்கே என்று சொல்லாமல் கிளம்பிப் போய் விட்டான்.

அரை மணி இருக்கும். திரும்பி வந்தான். கூடவே ஒருத்தனை கூட்டி வந்தான். இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஞாபகம் வந்து விட்டது. காலேஜில் நாங்கள் பி காம் படிக்கும் போது பி பி ஏ டிபார்ட்மெண்டில் இருந்தவன்.ப்ரசாத். இவன் இங்கே என்ன செய்கிறான்? என்று யோசித்து முடிப்பதற்குள் இன்னும் ஒரு மூன்று பேர் வந்தனர்.கையில் லக்கேஜோடு.

ஒருத்தன் மூஞ்சியும் சரியில்லை.எனக்கா, லக்கேஜெல்லாம் பார்த்ததும் அஸ்தியில் ஜுரம். ரொம்ப பயந்த சுபாவமானதால் அவனைப் பார்த்து வெறுமனே புன்னகைத்து " வா மச்சி... எப்டி இருக்க" போன்ற விசாரிப்புகளை முடித்து விட்டு பாலாஜியை தனியே தள்ளிக் கொண்டு வந்து கேட்டேன் என்ன விஷயம் என்று.திரு திரு வென்று முழித்தான்..

அதற்குள் தினேஷும் சுரேஷும் வந்து விட்டார்கள் ( ரூமில் மிச்சமிருக்கும் ரெண்டு பேர் ). அதே கேள்வி. என்னவோ தட்டுத் தடுமாறி பதில் சொலத் தொடங்கும் முன், ப்ரசாத்தே வந்து விட்டான். நாங்கள் பேசிக் கொண்டிருந்தது புரிந்து விட்டது போல.

" ஒரு சின்ன ப்ரச்னை டா. ஓனர் ரூமை விட்டு தொரத்திட்டான். அதான்...." என்றான்.

என்ன என்பது போல் கிலியடித்துப் போய் நாலு பேரும் பார்த்தோம்.

அதற்குள் நகர்ந்து போய் விட்டான். சினிமாவில் உணர்ச்சிகரமான வசனங்களை திரும்பி நின்று கொண்டு நிலைப்படியில் முட்டுக் கொடுத்துக் கொண்டு ஏதாவது சொல்வானோ என்று அவன் பின்னாலேயே போனோம்.நேராக பால்கனிக்குப் போனான். டவுசர் பாக்கெட்டிலிருந்து சிகரட்டை உருவி பற்ற வைத்துக் கொண்டான்.

அவன் கூட வந்த மூன்று பேரும் ஏற்கனவே அங்கே இருந்தனர். யாருக்கு வந்த சீக்கோ என்பது போல் சாவகாசமாகப் புகை விட்டுக் கொண்டிருந்தனர்.

ப்ரசாத், அவனுக்கு அடியாள் போலிருந்த இன்னொருத்தனை, " மாப்ள சொல்றா" என்று பணித்தான்.

எங்கள் நாலு பேரையும் பரிதாபமாகப் பார்த்த அடியாள், " அது ஒண்ணும் இல்ல பாஸ். எங்க ரூம் வழியா ஒரு பொண்ணு டெய்லி டைப்பிங் க்ளாஸ்க்கு போவும். சும்மா கலாய்ச்சிட்டு இருப்போம். இன்னிக்கு அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்து ரூமுக்குள்ள தள்ளி கொஞ்சம் ஓவரா கலாய்ச்சிட்டோம். பிரச்னை ஆயிடுச்சு. ஓனர் கபோதி தொரத்திட்டான்" என்றான்.

செட்டிநாடு மெஸ்ஸில் சாப்பிட்டு வந்திருந்த பரோட்டா வயிற்றில் கலக்கியது.

ஓனர் மூஞ்சி கண் முன் வந்து போனது.

 - வேற என்ன? தொடரும் தான்
 Wednesday, August 6, 2014

அசடு


வெயில் ஒரு புழுவைப் போல் மெல்ல உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது. காதோரம்,இரு நெற்றிப் பொட்டுக்கள், தொண்டைக் குழி என எல்லா இடங்களிலும் வியர்வைத் துளிகள் திரண்டு சொட்டத் தயாராய் நின்றன.கைக்குட்டையை எடுத்து அழுந்தத் துடைத்துக் கொண்டான். உள்ளே இருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தாள்.நீட்டியதைக் கையில் வாங்கிக் கொண்டான்.

வெளியே வைத்திருந்த நீராய் இருந்திருந்தால் இன்னேரம் கொதித்திருக்கும் வெயிலுக்கு. ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வந்திருக்கிறாள். இருந்தாலும் அவ்வளவு அதிகக் குளிர்வில்லை. அவளுக்குத் தெரியும். அவன் எப்போதும் தண்ணீரை ஒரே மூச்சில் குடிக்க விரும்புவான் என்று.கடும் குளிர்வாய் இருந்தால் அது முடியாது. அதனால் பதமாக எடுத்து வந்திருந்தாள். இது மாதிரி சிறிதும் பெரிதுமாய் விஷயங்கள். அவனைப் பற்றி. மறக்காமலிருந்தாள்.மூடியைத் திறந்து க்ளக் என சத்தம் எழும்ப முழு பாட்டிலையும் குடித்து முடித்தான்.

அவன் பெருமூச்சு விடுவதைப் பார்த்தாள். " ஏன் இவ்ளோ கஷ்டப் படறே? ரூம்ல ஏசி போடறேன். வாயேன் உள்ளே போய் உக்காந்து பேசலாம்" .

சட்டென்று புன்னகைத்து தலையை ஆட்டினான் வேண்டாமென்பது போல்." பரவால்ல. இங்கேயே இருப்போம்".

ஏசிக் குளிர்ச்சியை உடல் ரொம்பவே வேண்டினாலும் என்னவோ தயக்கம்.அர்த்தமில்லாமல்.

இப்போது அவள் பெருமூச்செறிந்தாள். " ஆல்ரைட்." வரவழைத்துக் கொண்ட புன்னகை. " சொல்லு.. ஹௌ ஆர் திங்க்ஸ்? நீ எப்படி இருக்கே?"

அத்தனை நாட்கள் கழித்து கொஞ்ச நேரம் முன்பு நேரில் பார்த்த ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் கேட்ட அதே கேள்வி தான். இப்போது நிதானமாக வீட்டில் எதிரே உட்கார வைத்துக் கொண்டு கேட்கிறாள். ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டென்று அவனுக்குத் தெரியும்."வெரி பைன்.நல்லா இருக்கேன்". மீண்டும் புன்னகை.

பதிலுக்கு இவன் கேட்கவில்லை " நீ எப்படி இருக்கே" என்று. கார்த்திக்கைப் பற்றி அவனுக்குத் தெரியும். .

"வீட்ல என்ன சொல்றாங்க? பொண்ணு பாக்கறாங்களா?"

சிறிய மௌனம். "ம்ம்... பாத்துட்டு தான் இருக்காங்க.ஒண்ணும் செட்டாகல."

மீண்டும் சிறு மௌனம்.

இன்னும் என்னவோ சொன்னாள். சரியாய் கவனிக்கவில்லை. அவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.அவளுக்கும் தெரிந்தே இருந்தது. பெரிதாய்க் கண்டு கொள்ளவில்லை.அவனை அவள் அறிந்திருந்தாள்.

அப்புறம்?

அப்புறம் என்ன? கார்த்திக் அங்கே இருக்கார். சீக்கிரம் நானும் போயிடுவேன். நல்ல லைப். திரும்ப இண்டியா வருவோமான்னு தெரியாது. அதான் ஞாபகத்துல வர்ற பிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் எல்லாரையும் இப்பவே டைம் இருக்கும் போது விசிட் பண்ணிட்டு இருக்கேன். கார்த்திக்கோட அத்தை ஒருத்தங்க இருக்காங்க அந்த ஏரியால. சுத்த போர். செம பிளேடு போட்டுட்டாங்க.நொந்து போய் திரும்பி வரும்போது ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்.நீ வந்து நிக்கறே. தென்? ஹியர் யு ஆர். புன்னகைத்தாள்.அவனும்.

அடுத்து ஒரு மௌனம். சற்றே நீண்ட, சங்கடமளிக்கக் கூடிய மௌனம்.இருவருமாய் பேசுவதறகு விஷயத்தையும் வார்த்தைகளையும் தேடும் அவகாச மௌனம்.
வெக்கை சூழ்நிலையை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டிருந்தது.சட்டென்று நிமிர்ந்தவள்," ஏய்.., இரு... நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்" என்று எழுந்து திரும்பி வேகமாகச் சென்றாள். அவன் வேண்டாமென்று சொல்லி விட்டால் மீண்டும் உட்கார வேண்டும். அவளுக்கு ஒரு சிறு இடைவேளை தேவையாய் இருந்தது. அதனால் அவசரம்.

அவனும் வேண்டாமென்று சொல்லவில்லை. இடைவேளை அவனுக்குமே தேவையாய் இருந்தது. அவள் சென்றதும் ஆழ்ந்து மூச்சு விட்டான். அவள் இல்லாத இடத்திலும் அவள் இருப்பை மிக லேசாக அறிவித்துக் கொண்டிருந்தது அவள் விட்டுச் சென்ற பர்ப்யூம் மணம். அவளது வாசமும் கொஞ்சம் கலந்திருந்ததோ?

சரியாய் ஐந்து நிமிடங்கள். கையில் ஜூஸோடு வந்தாள். கையில் தந்து விட்டு அமர்ந்தாள். முன்பை விட சற்றே நெருக்கமாக அமர்ந்தாள்.

விட்டுச் சென்ற இடத்திலிருந்து மௌனம் தொடர ஆரம்பித்தது. கீழே குனிந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், மெதுவாக சொன்னாள் " சாரிடா"...

அவள் எதைப் பற்றிப் பேசப் போகிறாள் என்று கிட்டத் தட்ட அனுமானித்து தான் அவனுமே வைத்திருந்தான். ஆனால் அவள் மன்னிப்பில் ஆரம்பித்ததை எதிர்பார்த்திருக்கவில்லை.

அறிந்தது போல் அவளே தொடர்ந்தாள். "உன்னை ரொம்ப கஷ்டப் படுத்தியிருக்கேன்.தெரியாம எல்லாம் இல்ல. தெரிஞ்சே. வேணும்னே தான்." நிறுத்தினாள்.

அவன் மறுப்பான் என்று எதிர்பார்த்தாள். அதையே தான் அவனும் செய்தான்.சிறு புன்னகையுடன்." என்ன பேசற நத்திங் லைக் தட். எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது. ப்ரொபோஸ் பண்ணேன். அண்ட் ஐ வாஸ் சின்சியர் டு யூ டூ. அதுக்காக உனக்கு என்னை பிடிக்கணும்னு இல்லையே? நீ உனக்கு பட்டதை சொன்னே.இன்பாக்ட் அப்போ ரொம்ப கோவம் வந்தது. எதனால இவளுக்கு என்னை பிடிக்காம போச்சு. நம்ம கிட்ட என்ன குறைன்னெல்லாம். இப்போ நினைச்சா கொஞ்சம் வெக்கமா, ஏன் சிரிப்பு கூட வருது" என்று புன்னகையிலேயே முடித்தான்.

சிறு மௌனம். அவள் பேசுவதற்கான வினாடி வந்தது. கடந்தது. பேசவில்லை. அவனே பேசினான் " கார்த்திக் இஸ் ஸோ ஐடியல் பார் யு. செம பேர் நீங்க ரெண்டு பேரும். கார்த்திக் மேல செம்ம காண்டு அப்போ எனக்கு. " சொல்லி விட்டு லேசாக வாய் விட்டு சிரித்தான். தொடர்ந்தான். " பட் மெச்சூரிட்டி கம்ஸ் வித் டைம். நீ எனக்கு ஓகே சொல்லிருந்தா நான் உன்னை நல்லா பாத்திட்டு இருந்திருப்பேன். பட் அதை விடவே கார்த்திக் உன்னை ரொம்ப நல்லா பாத்துக்கறானே?"

அமைதியாக இருந்தாள். நிறைய விஷயங்கள் பேச வேண்டும் என்று நினைக்க நினைக்க அவற்றை பேச முடியாமல் போகும் போது நிறைய மௌனங்களால் இட்டு நிரப்பப் படுகின்றன அவற்றுக்கான தருணங்கள்.

அவளும் அமைதியாக இருந்தாள். சட்டென்று நிமிர்ந்தவள், " எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது" என்றாள்.

ஆறு வருடங்களுக்கு முன் அவளிடமிருந்து கேட்கத் தவம் கிடந்த வார்த்தைகளை திடீரென்று வெயில் பெருகும் பிசுபிசுப்பான  ஒரு மதிய நேரத்தில், கணவனுடன் வெளிநாடு செல்லும் ஏற்பாட்டில் இருக்கும் அவள் வாயிலிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை.அதிர்வில் கை லேசாக நடுங்குவது போலிருந்தது. ஜூஸ் கிளாஸை சட்டென்று வைத்து விட்டான்.

தொடர்ந்தாள். "நீ ப்ரொபோஸ் பண்ணப்போ ஆக்சுவலா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது. இன்பாக்ட் பெருமையா இருந்தது. உனக்கு முன்னாடி நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணப்போ வராத பீல் உன் மேல எனக்கு வந்தது. பிகாஸ் யு வேர் பெர்பெக்ட். நல்ல வேலை, டீசண்டான சம்பளம், குட் லுக்கிங்..." நிறுத்தினாள்.

அவன் மனதில் தோன்றப் போகும் அடுத்த மிகப் பெரிய கேள்வியை படித்தவளாகத் தொடர்ந்தாள். "ஓகே. ஐ வானா டெல் திஸ் நௌ. திரும்ப உன்ன பாக்க முடியுமான்னு தெரில. ஸோ.... நீ யோசிக்கலாம். இவ்ளோ சொல்ற நான் ஏன் உன்னை வேண்டாம்னு சொன்னேன்னு...." மீண்டும் சிறு இடைவேளை மௌனம்.

" எனக்கே தெரில. அதான் உண்மை. எப்போ எங்கே எந்த நொடில உன்னை மாதிரி ஒருத்தனை மிஸ் பண்ணா பரவால்லங்கற எண்ணம் வந்ததுன்னு சரியா தெரில. மே பி, இவ்ளோ பர்பெக்டான பையன் என் கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணி கெஞ்சினப்போ வந்த கர்வமா இருக்கலாம். உன்னை வேண்டாம்னு சொன்னதுல அப்போ என்னவோ அவ்ளோ சந்தோஷம்.விஷயம் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சு என்னைப் ஆச்சரியமா பாத்தப்போ அப்படி ஒரு பெருமை. பட் அவங்கள்லாம் ஆச்சரியமா பாக்கல. என் லூஸுத் தனமான முடிவை நினைச்சு என்னை பாவமா பாத்திருக்காங்கன்னு ரொம்ப லேட்டா தான் புரிஞ்சது".

சட்டென்று இடை மறித்தான். மீண்டும் மறுக்கத் தான். " அப்டில்லாம் ஒண்ணும் இல்ல. தட் வாஸ் நாட் அ பேட் டெசிஷன். இப்போ பாரு, யுவர் லைப் இஸ் பர்பெக்ட்." என்று அவளை சகஜமாக்க முயன்றான்.

தன்னைப் பற்றி தன்னிடமே விட்டுக்கொடுக்காமல் பேசும் அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள்.

"நீ சொல்றது சரி தான். எந்தக் குறையுமே இல்ல.கார்த்திக் இஸ் அ ஜெம். ஆனாலும் உன்னை விட்டிருக்க கூடாதோன்னு அப்பப்போ தோணும்.ஏன் அப்படி தோணுதுங்கறதுக்கு ஐ ஹேவ் நோ ஆன்ஸர். சில விஷயங்கள்ல நீ கூட இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாக்காம இருக்க முடில. என்னை என்னன்னு சொல்லலாம்.... எனக்கே தெரிலடா. நான் ஒரு அசடுனு சொல்லலாமா" என்று கேட்டு வாய் விட்டு சிரித்தாள்.

பதில் எதிர்பார்க்காத கேள்வி என்று தெரிந்து அமைதியாய் இருந்தான். சிரித்து ஓய்ந்தவள் " ஏய் இங்க பாரேன்" என்றாள். அவள் முகம் பார்க்க முடியாமல் தவிர்த்துக் கொண்டிருந்தவன் வேறு வழியே இல்லாமல் அவள் கண்களை எதிர்கொண்டான்.அவ்வளவு நேரமும் அவள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்பது அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது.

அவள் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தான், எந்த கணத்தில் அவள் கண்களைப் பார்க்க முடியாமல் தவிர்க்க ஆரம்பித்தோம் என்று புரியவில்லை அவனுக்கு.

அப்போது தான் அது நிகழ்ந்தது. சட்டென்று எழுந்தவள், கண் மூடி அவன் உதட்டில் மென்மையாய் மிக மென்மையாய் ஒரு குழந்தைக்குக் கொடுப்பதைப் போல் முத்தமிட்டாள். ரசிக்கும் மனநிலையில் இல்லாதபோது கிடைக்கும் குழந்தையின் புன்னகையைப் போல். துக்க வீட்டில் மணந்து பரப்பும் சாமந்தியைப் போல்.ஆளற்ற வீட்டில் புகைந்து முடிக்கும் ஊதுபத்தியைப் போல், நனைவதற்கு யாருமற்ற அத்துவானத்தில் பெய்யெனப் பெய்யும் மழையைப் போல் அந்த முத்தம் இருந்தது.

சரியாய் மூன்றே வினாடிகள். சட்டென்று விலகிக் கொண்டாள். உதட்டின் மேல் அவன் வியர்வை லேசாகக் கரித்தது. எதுவும் நடவாதது போல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவன் தலைமுடியைச் செல்லமாய்க் கலைத்து விட்டாள். 

இவ்வளவு நேரம் எங்கே என்று தேடிக் கிடைக்காத அமைதி சட்டென்று உள்ளுக்குள் வந்து அமர்ந்தது போலிருந்தது அவனுக்கு.அவனும் புன்னகைத்தான். வாட்ச்சைப் பார்த்தான். " ஓ கே யா. டைம் ஆயிடுச்சு. நான் கிளம்பறேன். கார்த்திக் வந்தா சொல்லு." என்று சொல்லிக் கொண்டே எழுந்தான்.

அந்த முத்தம் எதுவுமே பேசவில்லை என்றாலும் ஏராளமாய்ப் பேசியது போலிருந்தது இருவருக்கும்.

வெளியில் வந்து நிறுத்தியிருந்த பைக்கை நோக்கி நடக்கத் துவங்கினான். அவளுக்கே அவளுக்கான பிரத்தியேக வாசனை இன்னும் உதட்டின் மீது சுழன்று கொண்டிருந்தது. அவனைக் காதல் கொள்ள வைத்த வாசனை. அத்தனை நேரம் புழுக்கிப் பொசுக்கிக் கொண்டிருந்த வெயில், மழைக்கான வெயிலாய் இருந்திருக்க வேண்டும். வானம் இருண்டிருந்தது. மழை வரும் போலிருந்தது. லேசான இடி. மேலே நிமிர்ந்து பார்த்தான்.

எங்கோ அத்துவானத்திலிருந்து இவனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒற்றை மழைத்துளி இவன் நிமிர்ந்து பார்த்ததும் நேராகக் கீழே இறங்கி வந்து உதட்டின் மேல் அமர்ந்தது.மெல்லத் துடைத்துக் கொண்டான். அந்த மழைத் துளி நனைத்தது போகவும் அவள் வாசனை உதட்டின் மீது மிச்சமிருந்தது.