Saturday, August 9, 2014

நண்பேண்டா.. நட்புடா... ( 2 )



அப்போ தான் திடீரென்று ஒரு விஷயம் உறைத்தது." டேய்... நீங்கள்லாம் வந்தப்போ ஓனர் பாத்தாரா?" என்றேன்.

இல்லை என்கிற மாதிரி தலையாட்டினான் பாலாஜி.

"எப்படிடா வந்தீங்க?"

" பைக்ல தான்". கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. " பைக் எங்கடா?"

"கீழ கேட்டுக்கு வெளிய தான் நிக்குது"

செத்தோம் என்று நினைத்துக் கொண்டே வெளியில் போய் எட்டிப் பார்த்தேன். கேட்டுக்கு வெளியே மாடு மாடாய் மூன்று பைக்குகள். ஓனர் கீழ் வீட்டிலிருந்து சும்மா வெளியே வந்து லேசாக எட்டிப் பார்த்தாலே போதும்.

அதற்குள் இவர்கள் எங்கோ கிளம்பினார்கள்." எங்கேடா போறீங்க?" என்று கேட்டதற்கு, " ரூம் தேடப் போறோம்டா" என்று அஸால்ட்டாகக் கிளம்பினார்கள்.

சட்டென்று அவர்களை தடுத்து நிறுத்தி விட்டு வெளியில் ஓடிப் போய் எட்டிப் பார்த்தேன். ஓனர் வெளியில் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு கள்ளக் காதலனை யாருக்கும் தெரியாமல் வழியனுப்பும் கள்ளக் காதலியைப் போல் ( என்னா உதாரணம். கருமம்டா சாமி ) அவர்களை வெளியே அனுப்பினோம்.

அடுத்த பயம். அவர்கள் திரும்பி வரும் போது ஓனர் பார்த்து விடாமலிருக்க வேண்டும். அவர்கள் கொண்டு வந்த பைகளெல்லாம் அங்கங்கே கிடந்தன. அந்த சில மணி நேரங்கள் நாங்கள் இருந்த மனநிலைக்கு சில்க் ஸ்மிதாவே நேரில் வந்து பர்பார்மென்ஸ் கொடுத்திருந்தால் கூட வாசலைத் தான் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்.

நல்லவேளை. ஓனர் பார்த்து விடும் பயம் பத்து மணி தாண்டியதும் கொஞ்சம் நீங்கியது. அவர் ஒன்பதரைக்கெல்லாம் கதவைப் பூட்டி விட்டு படுத்து விடுவார்.

பதினோரு மணிக்கு சாவகாசமாக வந்தார்கள். வாசலிலேயே அவ்ர்கள் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கீழே ஓடினான்.

வயிற்றில் புளி அது பாட்டுக்குக் கரைந்து கொண்டிருந்தது, மழை வேறு தூற ஆரம்பித்து விட்டது.நாங்கள் உள்ளே வந்து விட்டோம்.

வெளியே எட்டிப் பார்க்கப் பயம். வெளியே போன இவன்களும் கீழே போன சுரேஷும்  திரும்ப வந்தார்கள் லேசாகத் தூறலில் நனைந்து.

 கொஞ்சம் பயம் தெளிந்தது. வெளியே போய் எட்டிப் பார்த்தேன்.கேட்டுக்கு முன்னால் பைக்குகளைக் காணவில்லை. சின்ன நிம்மதி. எங்கடா என்பது போல் சுரேஷைப் பார்த்தேன்.

அவனும் வெளியில் வந்து எட்டிப் பார்த்தான். அவன் பார்வை போன திசையைப் பார்த்தேன். கேட்டுக்குள்ளே மரத்தடியில், படிக்கட்டுக்கு கீழே ஓனர் பார்த்தால் சட்டென்று தெரியாத மாதிரி மூன்று பைக்குகளும் சாதுவாக நின்றிருந்தன.பயமும் நிம்மதியும் சேர்ந்து வயிற்றை என்னவோ செய்தன.

ஒரு மாதிரியாகத் தூங்கி விட்டோம். அல்லது தூங்கின மாதிரி ஆளாளுக்கு சீன் போட்டுக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள். ஞாயிற்றுக் கிழமையானாலும் க்ளாஸுக்குப் போகிறாற் போல் ஆறு மணிக்கு எழுந்தாயிற்று, அவர்கள் ஒருத்தனும் எழுந்திருக்கவில்லை. வழக்கம் போல் வாசலில் வந்து நின்று சோம்பல் முறிக்கும் போது தான் பார்த்தேன். ஓனர் மெல்லப் படியேறி வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் பலான படத் தியேட்டர் வாசலில் அப்பாவிடம் மாட்டிக் கொண்ட பையன் மாதிரி ஆகி விட்டது நிலமை ( உன் உதாரணத்துல தீய வெக்க )

வேகமாக உள்ளே ஓடி எல்லாரையும் எழுப்பினேன். மூன்று பேரும் எழுந்தார்கள்,. ஓனர் வருவதைச் சொல்லி அவசரமாக அவர்களை பால்கனிப் பக்கம் தள்ளினேன். இந்த ப்ரசாத் கடங்காரன் மட்டும் எழுந்திருக்கவில்லை. ஓனர் வந்து விட்டார். இவருக்கு இன்ஸ்பெக்ஷன் வருவதற்கு இன்றைக்கு தான் நேரம் கிடைத்ததா?

உள்ளே வந்து நின்று முன்னும் பின்னும் நடந்தவாறு நோட்டமிட்டார். மசமசவென்று சரியாக விடியாத காலை.ஏதோ கேள்வி கேட்டார். எல்லாம் தலைக்கு மேலே போனது. காதில் ஒன்றும் விழவில்லை.

சோதனை மேல் சோதனையாக ப்ரசாத் அப்போது தான் எழுந்து வந்தான். உள்ளறையில் நின்றபடி சோம்பல் முறித்தான். ஓனர் அவனைப் பார்த்தார். மீண்டும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தார். பின் மெல்ல வெளியேறி படியிறங்கத் தொடங்கினார்.

நம்ப முடியாத அதிசயத்தைப் பார்த்தது போல் நான் , பாலாஜி, சுரேஷ் மூவரும் பேஸ்தடித்து நின்றோம். அப்புறம் தான் விஷயம் புரிந்தது. ப்ரசாத்தும் எங்கள் ரூம் மேட் தினேஷும் ஆறரை அடி உயரம். இவனைப் பார்த்து அவன் என்று நினைத்துக் கொண்டு போய் விட்டாரர்.


தினேஷ் லுங்கியை இறுக்கிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தான்.அந்த மூன்று பேரும் எங்கே என்று பார்த்தேன். பால்கனி சன்ஷேடில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டிருந்தார்கள்,

பல் கூட விளக்காமல் தம்மடிக்கிறான்கள். என்ன சுத்தமோ என்ன எழவோ?

மீண்டும் ரூம் தேடப் போகிறேன் என்று கிளம்பினார்கள். மீண்டும் முதல் நாள் ராத்திரி பண்ணிய எக்சர்சைஸையே ரிப்பீட் .

ஒரு நல்ல ஞாயிற்றுக் கிழமை அநியாயமாக வீணாகிக் கொண்டிருந்தது.

மதியம் போல் வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்ன வார்த்தைக்கு ப்ரசாத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டிருப்பேன். அவன் ஆணாகப் போனதாலும் அவ்வளவாக நன்றாக இல்லாததாலும் அதை செய்யவில்லை. " ரூம் கிடைச்சிடுச்சு மச்சி" இது தான் அவன் சொன்ன அமுத வாக்கியம்.

சட்டென்று லக்கேஜையெல்லாம் எடுத்துக் கொண்டு தடம் தெரியாமல் கிளம்பி விட்டார்கள்.

நெஞ்சுக்குள் அப்படி ஒரு நிம்மதி.அதே நேரம் ஒரு கேள்வி. " இவனுங்களுக்குனு எவனாவது மாட்டறானே? எவன் ரூம் கொடுத்திருப்பான்?"

அதே மனசின் லெப்ட் பக்கம் அதற்கு பதிலும் சொன்னது. " எவனாயிருந்தாலும் சரி. நிச்சயம் அவன் இளிச்ச வாயன் தான் - உங்களை மாதிரி.

1 comment:

  1. இப்ப சிரிப்பா இருந்தாலும் அப்ப 'திக்திக்'குனுதான் இருந்திருக்கும் என்று புரிகிறது! உதாரணம் சூப்பர்!

    ReplyDelete