Tuesday, March 25, 2014

அப்பா.

பிப்ரவரி 10 மாலை 7 மணி

"ஏய் எரும... ஏண்டி இவ்ளோ லேட்டு?"

"எருமைய லவ் பண்ற நீ என்னவாம்? பைக்ல பிக்கப் பண்ணுன்னா பண்றியா? பஸ்ல வந்து பாரு தெரியும்.வந்ததும் உக்கார வச்சு ரிலாக்ஸ் பண்ண வெப்பியா...அத விட்டுட்டு நிக்க வெச்சு கேள்வி கேட்டா எரிச்சல் தான் வருது..ச்ச..."

"ஹேய்... கூல்... ஏன் இவ்ளோ கோவப் படற...பாரு கண்ணெல்லாம் சிவந்து போச்சு...பைக் இருந்தா எடுத்துட்டு வந்திருக்க மாட்டேனா.. சர்வீஸ் குடுத்திருக்கேண்டி..சாரி குட்டிமா...என்ன சாப்படற? "

மெல்ல சிரித்தாள்.நெற்றிச் சுருக்கம் மறைந்தது.

"ஹப்பாடி,,சிரிச்சிட்ட. பொழச்சேன்"

அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். " என் அப்பாவும் இப்படி தாண்டா என்னை குட்டிமான்னு கூப்பிடுவார்"

" போச்சுடா.. இதோட இதை எத்தனையாவது தடவையா என் கிட்ட சொல்ற தெரியுமா? நீ அப்பான்னு ஆரம்பிச்சாலே எனக்கு வர வர விக்ரமன் பட ரீ ரெக்கார்டிங் கேக்க ஆரம்பிச்சிடுது...ஏ...ஏய்... அடிக்காத.... அடிக்காத டி லூசு"...

---------------------------------------------------------------------------

மார்ச் 23 மாலை 4 மணி

" வாம்மா... வாங்க தம்பி.. இவங்கள்லாம் உங்க பிரெண்ட்ஸா? வாங்க தம்பி எல்லாரும் வாங்க... உக்காருங்க "

அவள்  எப்படி விவரித்திருந்தாளோ அப்படியே தான் இருந்தார்.கெச்சலான தேகம். கண்களின் கீழ் கருவளையம். நெற்றியில் திருத்தமாக சந்தனம். காமாராஜர் சட்டை.கணுக்காலுக்குக் கொஞ்சம் கீழே முடிந்து போகும் வேட்டி, எல்லாம் அவள் சொன்னபடியே. பாக்கு போடுவாரோ?

அனைவருக்கும் தேனீர் வந்தது. சுவை இல்லையென்றாலும் குடித்தான்.

" எங்கே போனாள்? வந்ததிலிருந்து ஆளையே சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆங்காங்கே தென்பட்டு மறைந்து விடுகிறாள்.

" தம்பி.... நல்ல விசயம் பேசும் போது நாலு சொந்த பந்தம் இருக்கறது நல்லது. எங்க அண்ணாரு நாளைக்கு வர்றேன்னிருக்காரு... அவுரு வந்தவுடனே என்ன ஏதுன்னு பேசிக்கிடுவோம் தம்பி.... சரி தானுங்களே? உங்களுக்கு ஏதும் பிரச்சினைங்களா?"

"அய்யய்யோ அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க.. நீங்க சொல்றபடியே ஆவட்டும்.... " என்றவன் தயங்கினான். " நைட்டுக்கு நாங்க...."

" அதுக்கென்ன தம்பி... எங்க தோப்பு ஒண்ணு இருக்குது... அங்க நாங்க எளனி பொறிக்க போக கொள்ளன்னு ஒரு வீடு கெடக்குது.. நல்லாத் தான் இருக்கும்... சுத்தம் பண்ணி வெக்க சொல்லிருக்கேன்... நல்லா தங்கிக்கங்க... சாப்பாடு அங்கியே ஏற்பாடு பண்ணியிருக்குது... மாரி கூட வருவான் வளி காட்ட"

"ரொம்ப நன்றிங்க"...

----------------------------------------------------------------------------

பிப்ரவரி 19 மாலை 6 மணி
கண்களில் நீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. மூக்கை உறிஞ்சிக் கொண்டே இருந்தாள். தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று புறப்பட்ட இருமல் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது.

மெல்ல தலையை வருடினான். " என்னடா.. தொண்டை ரொம்ப வலிக்குதா?...கொஞ்சம் பொறுத்துக்கோ... இன்னும் ரெண்டு பேர் தான்.அப்புறம் நாம போயிடலாம்.. " தலையை வருடியபடியே இருந்தான்.

சட்டென்று தோளில் சாய்ந்தாள். உடல் மிகுந்த சூடாக இருந்தது.

" உடம்பு ரொம்ப மோசமா இருக்குடா.. ஆனா உன் தோள்ல சாஞ்சுகிட்டா பெட்டரா பீல் பண்றேன்" மூக்குறிஞ்சலின் நடுவே சொன்னாள்.

மெல்ல சிரித்தான். " அவ்ளோ தானே ... எவ்ளோ நேரம் வேணா சாஞ்சிட்டே இருடா... ஆனா என் ட்ரெஸ்ல மட்டும் சளி ஆக்கிடாதே"

" ஏய் ஏய்.. உடம்பு சரி இல்லன்னா கூட என்னை அடிக்கிறத விட மாட்டியா?"

உடல் நோவையும் மீறி லேசாக மலர்ந்தாள்.

" என் அப்பா கூட இப்படி தாண்டா.. எனக்கு ஒடம்பு சரி இல்லன்னா தோள்ல சாச்சிப்பார்.. அவ்ளோ நல்லா பாத்துப்பார்."

" மறுபடியும் விக்ரமன் ரீ ரெக்கார்டிங்கா...சரி சரி... நீ பலசாலி.. ப்ச்.. ஏ.. ஏய்.. அடிக்காதடி வலிக்குது"

--------------------------------------------------------------------------------

மார்ச் 23 இரவு 8 மணி


"ப்பா... செம சாப்பாடு இல்ல?"

"ப்ச்"..

" என்னடா சலிச்சிக்கற?"

" இல்லடா... ஊர்லேர்ந்து வந்ததுலேர்ந்து அவ கண்லயே பட மாட்டேங்கறா... போன் வேற ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கு... அவ எங்கேன்னு அவ அப்பா கிட்டயே எப்படி கேக்கறது... அதான் கேக்கல... என்னவோ மாதிரி இருக்கு டா"

" டேய்... தேவை இல்லாம டென்ஷன் ஆகாத. ஒண்ணும் பிரச்சினை இல்ல. அவங்கப்பா எல்லாத்துக்கும் ஓகேன்னு சொல்லி தானே உங்க ரெண்டு பேரையும் வர சொன்னார். எப்படியும் நாளைக்கு எல்லாருமா உக்காந்து பேசும் போது கண்டிப்பா அவ அங்க தான் இருப்பா. அப்ப பாத்துக்கலாம். கவலைப் படாம இரு"

----------------------------------------------------------------------------------

மார்ச் 4 மாலை 7 மணி

" என்னடி ஆச்சு? நேத்து ஏதோ பிரச்சினைன்னு சொல்லிட்டு காலை கட் பண்ணவ அதுக்கப்புறம் போனே எடுக்கல"

"ப்ராப்ளம் தாண்டா... எங்க ஊர்லருந்து அப்பாவொட ப்ரெண்ட் இங்க வந்திருக்கார் போல ஏதோ வேலையா."

" சரி தான். நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தத பாத்துட்டாராக்கும்.. உங்க அப்பா காதுக்கு போய்டுச்சா இல்லையா?"

" டேய்.ப்ளீஸ் பி சீரியஸ். எனக்கு பயமா இருக்கு..."

" எதுக்கு பயம்? உங்க அப்பா தான் உனக்காக என்ன வேணா செய்வார்னு சொன்னியே?"

" இல்லடா... இது வேற... எங்க அப்பாவையும் மீறினது. அதான் பயமா இருக்கு.அவர் அப்பா கிட்ட போய் சொல்லிட்டார் போல. அப்பா பேசினார் .ரொம்ப தயங்கினார். என்னென்னவோ ரொம்ப நேரம் பேசினார். என்ன கன்வின்ஸ் பண்ணுிடலாம்னு ரொம்ப ட்ரை பண்ணார். நானும் நிதானமா உன்ன விட்டு குடுக்காம பேசினேன் கடேசில கொஞ்சம் இறங்கி வர மாதிரி பேசினாரு.ரொம்ப சாந்தமா ஆயிட்ட மாதிரி தெரிஞ்சது. அப்புறம்..."

" அப்புறம்?" நம்ம ரெண்டு பேரையும் ஊருக்கு வர சொன்னார் டா"

" நல்லதா போச்சு.. "

"சரிடா.. உங்க அப்பா அம்மா ?"

அவங்க ரெண்டு மாசத்துல வந்துடுவாங்களே ட்ரிப் முடிஞ்சு? அப்ப பாத்துக்கலாம். அதுக்கு முன்னாடி நாம உங்க அப்பா கூட எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம்"
 
"ம்ம்.. ஓகே டா"

"அது சரி உங்க அப்பா சமாதானமா பேசினதுக்கு ஏன் கவலை? அவர் குணமே அப்படி தான். ரொம்ப சாதுன்னு நீ தானெ அடிக்கடி சொல்லுவே?"

பெருமூச்சு. " ம்ம். நான் தான் சொன்னேன். இருந்தும் என்னவோ தெரியல டா. ஒரு மாதிரி அனீசியா இருக்கு மனசுல"

" கவலைப் படாத. நாம ரெண்டு பேரும் மட்டும் போக வேண்டாம். நகுலையும் வினுவையும் கூட்டிட்டு போகலாம். கொஞ்சம் தெம்பா இருக்கும். ஓகேவா"

சரி டா....பாப்போம்

-----------------------------------------------------------------------------------

மார்ச் 23 இரவு 10 மணி

"ச்சே... என்ன இவ? ஊருக்குள்ள வந்ததும் என்னை சுத்தமா மறந்துட்டா? இடியட். நேர்ல பாக்கும் போது இருக்கு அவளுக்கு... என்னை என்ன கேனப் பயன்னு நினைச்சிட்டாளா? அப்பன்னா எல்லாத்தையும் மறந்துடறா... ஷிட்...."


-----------------------------------------------------------------------------------

மார்ச் 23 இரவு 11 மணி

 அவள் காற்றுக்குப் போராடிக் கொண்டிருந்தாள். கை கால்கள் காற்றில் அஅசைந்தாடிக் கொண்டிருந்தன. அவர் கால்களை கெட்டியாகப் பிடித்தாள்.

" த்த.. பங்காளி சும்மா வீசுது பாரு... நீ போயி கையி ரெண்டையும் அமுக்கு...."

" டேய் சொடல.. கால அமுக்கிப் புடிடா... எத்தையானும் எட்டி உதைச்சு சத்தம் கித்தம் வரப் போவுது"

கண்கள் இமைக்குள்ளிருந்து வெளியே விழுந்து விடுவது போல் துடித்துக் கொண்டிருந்தது. "ஹ்ம்..ஹ்க்க்..ஹக்க்க்" வினோத சப்தங்கள் அவளிடமிருந்து. நாக்கு வெளியே வந்து போராடியது.

" மாப்ள கொஞ்சம் நல்லா அழுத்து.. எவ்ளோ நேரம்?"

அவர் வேறு பக்கம் முகத்தைத் திருப்பியிருந்தார். முகத்தில் உணர்ச்சி இல்லை. வியர்வை பொங்கி வழிந்து காமராஜர் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. இடக் கையை சுவற்றில் முட்டுக் கொடுத்திருந்தார். வலது கால் ஸ்திரமாக அவள் கழுத்தின் மேல் பதிந்திருந்தது...அவள் துடிப்பு அதிகமாக அதிகமாக  இவர் அழுத்தம் அதிகரித்தது. அவள் தொண்டைக் குழி உருளுவதும் போராடுவதும் உள்ளங்காலில் தெரிந்தது.

சிறிது சிறிதாக அடங்கத் துவங்கினாள்.

முழுதாக அடங்கிய பின் மெல்லக் காலை எடுத்தார். கீழே பார்க்கவில்லை. கைகளையும் கால்களையும் அழுந்தப் பிடித்திருந்தவர்கள் பெருமூச்சோடு எழுந்து ஊற்றிக் கொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டனர்.

அருகில் வந்து தட்டிக் கொடுத்தார் கையைப் பிடித்துக் கொண்டவர். " நம்ம மானத்தக் காப்பாத்திட்ட மாப்ள.. நமக்குன்னு ஒரு இது இருக்குல்ல... நாளப் பின்ன இந்தப் புள்ளையப் பாத்து அதது கெளம்பிருச்சுன்னா? பதமா சொன்னா கேட்டாத் தானே? அப்பமே கேட்டிருந்தா இதெல்லாம் ஆயிருக்குமா? சரி சரி வுடு... நீ ஒன்ணும் மனசப் போட்டு ஒடச்சிக்காத. தலைய முளுவிட்டு போய் நிம்மதியா படு.. இங்க மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்... ஆமா? அந்தத் தம்பிய தென்னந்தோப்பு வீட்ல தானே தங்க வெச்சிருக்க?"

----------------------------------------------------------------------------------

மார்ச் 24 காலை 6 மணி


அந்த தோப்பு வீட்டின் கதவு இடிந்து விழுவது போல் தட்டப் பட்டது.

2 comments:

  1. ரொம்ப அருமையா வந்திருக்கு ஹரீஷ்.

    ReplyDelete
  2. அழகா எழுதறே நீ.. ரொம்ப நல்லா வந்திருக்கு. இன்னும் உயரம் போவாய் தம்பி.

    ReplyDelete