Sunday, March 30, 2014

ஆறாவது பாயின்ட்



அவளை முதல் பார்வையிலேயே எனக்குப் பிடித்திருந்தது.

அதிக உயரமோ குள்ளமோ இல்லாமல் சரியான உயரம். மத மதவென்று இல்லாமல் உருவி விட்டாற் போல் லேசான உடல்வாகு.

லூஸ் ஹேர் விட்டிருந்தாள். கழுத்தில் அளவான சங்கிலி, காதில் உறுத்தாத ஸ்டட். முக்கியமாக எனக்குப் பிடிக்காத லிப்ஸ்டிக் இல்லை.

நடை குதிரை போல் டாக்கு டாக்கென்றும் இல்லை, ரொம்பப் பணிவாகவும் இல்லை.

ரொம்ப சிவப்பெல்லாம் இல்லை. மாநிறம் தான்.இருந்தாலும் என்னவோ பிடித்தது.

அழகான பெண்களைப் பார்த்தால் பெரும்பாலான சராசரியான ஆண்களுக்கு வரும் படிநிலை எண்ணங்கள் பின்வருமாறு.

1 . அவளிடம் பேச வேண்டும்.

2 . இம்ப்ரஸ் செய்ய வேண்டும்

3 . அவளுக்கு நம்மைப் பிடிக்கச் செய்ய வேண்டும்.

4 . அப்புறம் காதல்.

5 . அதற்கடுத்து கல்யாணம்.

6 . உடனே கட்டில்.

இதில் ஆறாவது பாயின்டை மனதில் இருத்தியே மற்றவை எல்லாம் செய்யப் படுகின்றன பெரும்பாலும். சில சமயம் நான்கும் ஐந்தும் செய்யாமலே ஆறாவதுக்கான வாய்ப்பு வாய்க்கும் சிலருக்கு. மனசாட்சி உள்ளவன், நல்லவன் போன்ற பைசா பெறாத பட்டங்களுக்கு ஆசைப் படுகிற உத்தமர்கள் அந்த மாதிரி வாய்ப்புகளை, பெருமூச்சு கொண்டு ஒதுக்கித் தள்ளி விடுவர். நான் அப்படியில்லை. அவளைப் பார்த்ததும் எனக்கு முதலில் ஆறாவது தான் தோன்றியது. அப்புறம் மூன்று. அப்புறம் இரண்டு, ஒன்று. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

முதல் முயற்சியாக, அவளைப் பார்த்துப் புன்னகை. தினம் தினம், தவறாத, மறக்காத ரேஷன் புன்னகை.
அப்புறம்... பூர்வ ஜென்மத்தில் எவ்வளவு பெரிய பாவம் செய்தவனாக இருந்தாலும், இந்த ஜென்மத்தில் கடவுள் நிச்சயம் சிறு சிறு சந்தர்ப்பங்கள் கொடுப்பான். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் எனக்கும் கொடுத்தான்.

வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

" ஏன் வெயிட் பண்றீங்க? வாங்க எங்கே போகணுமோ ட்ராப் பண்ணிடறேன்".

வந்தாள். பரஸ்பர அறிமுகம். வெட்டிப் பேச்சு.

வீட்டில் ட்ராப் பண்ணி விட்டுக் கிளம்பினேன். பிறகு ரெண்டு மூன்று தடவை, திட்டமிட்டே யதேச்சையாக அவளை ட்ராப் செய்தேன். அப்புறம் பேசி வைத்துக் கொண்டு ட்ராப்.

நெருக்கம் அதிகரித்தது... ரொம்பவும் இயல்பாக இருப்பது போல் இயல்பாக நடித்தேன்.மனசு மட்டும் அடிக்கடி ஆறாவது பாயின்டை நினைத்துக் குதித்தது. அதட்டி அடக்கி வைத்தேன்.

ஆனால் அந்த ஆறாவது பாயின்டை யோசிக்கும் போதெல்லாம் அவளைப் பற்றிய ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் என்னை சங்கடப் படுத்தியது.

அது அவள் கழுத்தில் இருந்த தாலியும் கால் மெட்டியும்.தான். அடடா... இதை முன்னமே சொல்லவில்லை இல்லையா? அவள் திருமணமானவள்.

ஆசை அதிகமாக அதிகமாக மனுஷ மனசு எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப் படாதில்லையா? அது போல் தான் நானும். அவள் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்பதில் இருந்த சின்ன சஞ்சலம், நெருக்கம் அதிகமானதால் பெருகிய ஆசையில் அடித்துக் கொண்டு போய் விட்டது.ஆறாவது பாயின்ட் மட்டுமே ஸ்திரமாக நின்றது.

ரொம்பவும் எதிர்பார்த்திருந்த அந்த ஆறாவது படிநிலையை அடையும் வாய்ப்பும் ஒரு நாள் வந்தது.

வழக்கம் போல் ட்ராப். எப்போதும் பை சொல்லி விட்டு நான் வண்டியைக் கிளப்பும் போது வீட்டுக்குள் திரும்புகிறவள், ஒரு முறை கூட வீட்டுக்குள்ள வா என்று கூப்பிடாதவள், அன்று கூப்பிட்டாள்.பார்வையில் நிச்சயம் அழைப்பிருந்தது. அல்லது நான் அப்படி  எடுத்துக் கொண்டேன்.

நடந்தாள். பின்னாலேயே நடந்தேன்.பூட்டைத் திறந்து தாழ்ப்பாள் விலக்கி கதவு தள்ளி உள்ளே நுழைந்தாள்.

சட்டென்று தயங்கி நின்றேன். " தீப்தி..." அவளை அழைத்தேன்.

அடடா... கதை சொல்லும் ஆர்வத்தில் அவள் பெயரை சொல்லவே விட்டுப் போய் விட்டது. அவள் பெயர் மேலே சொன்னது தான். தீப்தி.

---------------------------------------------------------------------------

லேப் டாப்பில் படித்துக் கொண்டே வந்தவள் சட்டென்று அவனை முறைத்தாள்.

பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அவனை வேகமாக நாலு மொத்து மொத்தினாள்.

" ஏய்... ஏன் டென்ஷன் ஆகற.. அடிக்காத ப்ளீஸ்.." பொய்க் கெஞ்சல் கெஞ்சியவன், சட்டென்று கண்ணை சுருக்கினான்.

" கதை எப்படி இருக்கு பேபி?" அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

" உன் மூஞ்சி மாதிரி இருக்கு. கள்ளக் காதலெல்லாம் ஒரு சப்ஜெக்ட்டா? அதைப் பத்தி விலாவாரியா ஒரு கதை வேற. இதையெல்லாம் கூட மன்னிச்சுடுவேன். ஆனா அந்த ஹீரோயின்னுக்கு என் பேரை வெச்ச பாரு... அது தாண்டா செம கோவமா வருது.

சொன்னவள் திரும்ப தலையணையை எடுத்து நாலு மொத்து மொத்தினாள்.

" முதல்ல இந்தக் கதையை தூக்கி குப்பைல போடு. இல்ல எழுதியே தீருவேன்னா மரியாதையா என் பேரை மாத்து. இல்லன்னா ராத்திரி சாப்பாடு கிடையாது உனக்கு."

சொல்லி விட்டு கோபமாக பெட் ரூமிலிருந்து வெளியேறினாள்

அவள் போகும் வரை பார்த்தவன், அவளிடம் பேசுவது போல், ஆனால் அவளுக்குக் கேட்காமல், "ஏய்... ஏய்.. தீப்தி.. கதைல வர தீப்தி நீ இல்லடி"... என்று கிசு கிசுப்பாக  சொன்னான்.

கொஞ்சம் கூட பதறவில்லை.மெல்ல சிரித்துக் கொண்டான்.தலையைக் கோதிக் கொண்டான்.

பக்கத்திலிருந்த போன் அடித்தது. எடுத்து யாரென்று பார்த்தான். முகம் மலர்ந்தான்.

போனை எடுத்தான். " ம்ம்.. சொல்லு"...

சிரித்தான்.

....." ஈவினிங்? ட்ரை பண்றேன்.. ஒரு நாலு மணிக்கு கன்பர்ம் பண்றேன்."

மீண்டும் சிரிப்பு.

" கதை எழுதிட்டு இருக்கேன். .

.....என்ன கதையா? நம்ம கதை தான். நாம மீட் பண்ணது.. பேசினது...இன்னும் இன்னும்."

நீண்ட சிரிப்பு சிரித்தான்.

" தீப்தி டார்லிங்.. உன் பேர் கூட மாத்தலை. கதையிலயும் உன் பேர் தீப்தி தான் "...

இந்த முறை பலமாக சிரித்தான்.

" எந்த ஸ்டேஜ்ல இருக்கேனா?"

சிரித்துக் கொண்டே சொன்னான்.

" ஆறாவது பாயின்ட்ல இருக்கேன்".

வெளியே மறைந்து நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவன் மனைவி தீப்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.

No comments:

Post a Comment