Wednesday, February 19, 2014

சதுரகிரி - 2

வியர்த்து விறுவிறுத்து சுந்தர மகாலிங்கத்தின் வாசலை மிதித்து, உள்ளே சில அடிகள் எடுத்து வைத்ததும், " சாமி வாங்க அன்னதானம் சாப்ட்டு போவலாம்" என்று அன்னதான மடத்திலிருந்து வந்த குரல் கையைப் பிடித்து இழுக்காத குறையாய் ஈர்த்தாலும் ( ரொம்ப சிரமப் பட்டு ) மனதை அடக்கிக் கொண்டு, " இல்லீங்கய்யா.. சாமியப் பாத்துட்டு வந்துடறோம்" என்று சொல்லி விட்டு கோவிலை அடைந்தோம்.

இங்கே சுயம்புவான சுந்தர மகாலிங்கம் சற்று சாய்ந்த நிலையில் இருப்பது சிறப்பு. இடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளில் ஒன்று தினமும் கூட்டத்திலிருந்து விலகிப் போய் ஒரு கல்லுக்கு தன் பாலை சொரிந்ததாகவும், இதை கண்டு கொண்ட இடையன், கோபத்தில் மாட்டை அடித்ததோடு, அந்தக் கல்லையும் அடித்ததாகவும், அதில் அந்தக் கல் வளைந்ததாகவும், பிறகு சிவபெருமான் காட்சி தந்து உண்மை உணர்த்தி கோவில் கொண்டதாகவும் ஒரு வரலாறு வழங்கி வருகிறது.

அடிபட்டதால் உண்டான தழும்பு போன்ற சிறு பிளவு ஒன்று லிங்கத்தின் மேல் இன்றும் உண்டு.

சுவாமியை ஆற அமர தரிசனம் பண்ணி விட்டு திரும்ப வரும் போது அதே குரல். மனதை மீண்டும் அடக்கி விட்டு, " அவரையும் பாத்துட்டு வந்துடறோங்க" என்று சொல்லி விட்டு சந்தன மகாலிங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்

சுந்தர மகாலிங்கம் நுழைவு வாயில்
படிகளிறங்கி, மீண்டும் எதிர்ப்பக்கம் மேலேறி, சித்தர்கள் தோரணவாயில் தாண்டி, சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்தோம்.அங்கே அமர்ந்திருந்த ஒரு குழுவிடம் விசாரித்தோம் அடுத்த நாள் மேலே போய் தவசிப்பாறையை பார்க்கும் திட்டத்தை உறுதி செய்ய.
சந்தன மகாலிங்கம் நுழைவுவாயில்

"நாங்களும் சென்னைல இருந்து தான் வரோம்.பெரிய ப்ளானா போட்டுட்டு வந்தோம். இங்க என்னடான்னா மேலயே போகக் கூடாதுங்கறாங்க" என்றார் ஒருவர் கவலையுடன். இதென்னடா சதுரகிரிக்கு வந்த சோதனை என்று பதறி விசாரித்தால், " நிறைய தப்பு நடக்க ஆரம்பிச்சிடுச்சாம் இங்க. எல்லாம் அந்த கடை வெச்சிருக்கறவங்க பண்ணின வேலை. வரவங்களுக்கு என்னத்தையோ சப்ளை பண்ண வேண்டியது. வர்றவங்களும் அதை அடிச்சிட்டு, மேலே போய் இல்லாத கலாட்டாவெல்லாம் பண்ண வேண்டியது. அப்புறம் என்ன ஆவும்.இதான் ஆவும்" என்று முடித்தார்.

சென்ற முறை இருந்த அத்தனை கடைகளும் இந்த முறை காணாமல் போனதன் காரணம் புரிந்தது. நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வனத்துறையர் ஒருவர் சிரித்துக் கொண்டே சொன்னார். மேலே போய்த் தான் ஆவணும்னு அடம் புடிச்சா, தலைக்கு ஐயாயிரம் பைனு. எப்படி தம்பி வசதி?"

மனிதர்களுக்கு இயற்கை எத்தனையோ விஷயங்களை அள்ளித் தருகிறது. ஆனால் பேராசை எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டு தான் ஓய்வேன் என்கிறது. இதனால் பாதிக்கப் படுவது தப்பு செய்பவர்கள் மட்டுமல்ல. இயற்கையை இம்சிக்காமல் அதை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மைப் போன்றவர்களும் தான்.

மனதை ஒரு மாதிரி தேற்றிக் கொண்டு, திரும்ப அன்ன தான மடத்தை நோக்கி நடையைக் கட்டினோம்.

அங்கே போனதும் முதலில் எங்களை சாப்பிட கூப்பிட்டவரைக் காணோம். இன்னொருத்தர் வந்து ." என்ன சாமி வேணும்?" என்றார்.
"சாப்பாடு இருக்குதுங்களா?"
" இருக்கு சாமி ..கொஞ்ச நேரம் வெயிட் பண்றீங்களா?"
"சரிங்க". திண்ணையில் அமர்ந்தோம்.

அன்னதான மடம்
அதற்குள் இன்னொருத்தர் வந்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.
சும்மா சொல்லக் கூடாது. மலையேறிய களைப்புக்கு, சாப்பாடு சும்மா ஜெட் வேகத்தில் உள்ளே போனது.சாதம், சாம்பார், ரசம், மோர், பொறியல், கடைசியில் பாயசம். அன்ன தானம் போலவே இல்லை. விருந்து தான்.

பெரிய ஏப்பம் ஒன்றை விட்டு விட்டு இரவு தங்க இடம் தேட ஆரம்பித்தோம்.1 comment:

  1. ( ரொம்ப சிரமப் பட்டு ) மனதை அடக்கிக் கொண்டு,:D
    //மனிதர்களுக்கு இயற்கை எத்தனையோ விஷயங்களை அள்ளித் தருகிறது. ஆனால் பேராசை எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டு தான் ஓய்வேன் என்கிறது. இதனால் பாதிக்கப் படுவது தப்பு செய்பவர்கள் மட்டுமல்ல. இயற்கையை இம்சிக்காமல் அதை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மைப் போன்றவர்களும் தான்// Superb Pace :) எழுத்து மெருகேறுகிறது :)

    ReplyDelete