Friday, September 5, 2014

தமிழ்ச் சீரியல்களின் சீரிய பண்பாடுகள்






1 . ஆணாக இருந்தால் நிச்சயம் இரண்டு மனைவிகளும் பெண்ணாக இருந்தால் நிச்சயம் இரண்டு கணவர்களும் ( எண்ணிக்கை மாற்றத்துக்குட்பட்டது ) கொண்டிருப்பார்கள்.

2 . வெள்ளிக்கிழமை, அல்லது நல்ல நாள் ஏதாவது என்றால் நிச்சயம் தவறாமல் ஒரு சாவு சீனும் மனதை உருக்கும் பின்னணி இசையுடன் அழுகைக் காட்சியும் உண்டு. டோண்ட் மிஸ் இட் ஐ ஸே...

3 . சீரியலில் நல்லவர்களாக வருகிறவர்கள் எந்தக் காலத்திலும் போடும் சவால்களில் ஜெயிக்கத் துப்பில்லாதவர்களாகவே இருப்பார்கள். வில்லன்கள், வில்லிகளுக்கு மட்டுமே எல்லா சந்தர்ப்பங்களும் சாதகமாக இருக்கும். அப்படி நல்லவர்களுக்கு சாதகமாய் ஏதானும் நடந்தால் சீரியல் முடிவுக்கு வருகிறதெனக் கொள்க

4 . 30 நிமிட ஒளிபரப்பில் 10 நிமிட விளம்பர இடைவேளை போக சீரியல் நேரம் 20 நிமிடங்கள். அதில் நிச்சயம் 15 நிமிடங்கள் “ நாசமாப் போக,உன்னை அழிக்காம விட மாட்டேன், உன்னைக் கொன்னுட்டு தான் மறு வேலை, உருப்படுவியா, என் பாவம் உன்ன சும்மா விடாது “ இவை போன்ற மற்றும் இன்ன பிற தீந்தமிழ்ச் சொற்கள் புழங்கக் கேட்கலாம்.

5 . ஹீரோ வில்லன்களால் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் இடம் ஹீரோயினுக்கு நன்றாகத் தெரிந்த இடமாயிருக்கும். இருந்தாலும் அதைத் தவிர எல்லா இடங்களிலும் உயிரைக் கொடுத்துத் தேடுவார் ( குறைந்தது நாலு எபிசோடுகளுக்கு )

6 . நல்லவர்களாக இருப்பவர்கள் திடீரென்று கெட்டவர்களாக மாறி விடுவார்கள். இதை ஈடு செய்ய கெட்டவர்களாக இருக்கும் யாராவது கண்டிப்பாக நல்லவர்களாக மாறியே தீருவார்கள். டைரக்டருக்கு போர் அடிக்கும் போதெல்லாம் இது நடக்கும்.

7 . வில்லன்களும் வில்லிகளும் எல்லாரும் நடமாடும் இடத்திலேயே நின்று கொண்டு தைரியமாக சதியாலோசனை செய்வார்கள். எல்லா விஷயமும் தெரியும் நல்லவர்களுக்கு இதெல்லாம் மட்டும் காதில் விழவே விழாது. சீரியல் முடிகிற வரைக்கும்.

8 . சதி செய்து கணவன் மனைவியைப் பிரிக்கும் பெண்கள், அவர்கள் ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது பக்கத்திலேயே நின்று சீன் முடிகிற வரை சகுனிச் சிரிப்பு சிரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பாவம் சண்டை போடுகிறவர்களுக்கோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் குடும்பத்தாருக்கோ யாருக்குமே இதைப் பார்க்க வாய்க்காது.

9 . ஒரே ஒரு பாட்டு போட்டு வைத்திருப்பார்கள். ஹீரோ ஹீரொயின் ரொமான்ஸ், ஹீரோ காணாமல் போன ஹீரோயினை தேடுவது, ஒரு பாவமும் அறியா கதாநாயகியை போலீஸ் அடிப்பது, வில்லன் ஹீரோவை டார்ச்சர் செய்வது என்று எல்லா சீனுக்கும் அதே பாட்டு தான் பேக் கிரவுண்டில் ஒலிக்கும்.

10 . குழாயடியில் குறுக்கே குடத்தை விட்டவளுடன் சண்டை போடுவது போல் ஆ ஊன்னா அம்மனிடம் போய் சண்டை போடுவார்கள். பாவம் அம்மன். சில சமயம் தற்கொலை மிரட்டலெல்லாம் கூட விடுப்பார்கள்.

11 . இவர்கள் குளிக்க சாப்பிட பாத்ரூம் போகவெல்லாம் எப்போது தான் நேரம் ஒதுக்குவார்கள் என்று காண்போர் வியக்கும் வண்ணம் சில கேரக்டர்கள் எப்போதும் அடுத்தவரைக் கெடுக்க சதியாலோசனையிலேயே இருப்பார்கள்.

12 . ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வருகிறாற் போல் சட்டென்று ஹீரோ வில்லனையோ அல்லது வில்லன் ஹீரோவையோ சுட்டு விட்டால் அது ஏதோ ஒரு கேரக்டர் காணும் துர்சொப்பனம் எனக் கொள்க.

13 . எந்த சீன் ஆரம்பிக்கும் போதும் யாரேனும் ஒருவர் ஏதோ யோசனையிலிருப்பதும், இன்னொருத்தர் வந்து என்ன யோசிக்கிறீங்க என்று கேட்பதும் சீரியல் சீன்களின் துவக்க மரபு.

14. சீரியல்களின் முக்கால்வாசி இளம் பெண்களுக்கு , பொறுக்கிகள், ஏற்கனவே திருமணமானவர்கள், கள்ளக் கடத்தல் செய்பவர்கள் போன்ற ஆண்கள் மீதே ஈர்ப்பு ஏற்படும்.

15 . எந்தக் குடும்பத்திலும் ஐந்துக்குக் குறையாமல் பிள்ளைகள் இருப்பார்கள். ( அந்த முக்கோணத்தை இவர்களெல்லாம் பார்த்ததே இல்லையா?) ஒரு அண்ணன் நாலு தங்கச்சி, ஒரு அக்கா நாலு தம்பி, இல்லை ஐந்துமே பெண்கள் என பல பெர்முடேஷன் காம்பினேஷன்களில் இந்தக் குடும்பங்கள் காணக் கிடைக்கும் .


16 . முதல் சீரியலில் அடியாளாக நடிப்பவர் அடுத்த சீரியலில் டாக்டர். அந்த சீரியலில் டானாக நடிப்பவர் அடுத்த சீரியலில் சித்தர். அந்த சீரியலில் மந்திரவாதியாக நடிப்பவர் அடுத்த சீரியலில் பிசினஸ் மேக்னட்டு.... இது ஒரு சங்கிலித் தொடர்.


17 . கடைசியாக சீரியல் எடுப்பவர்களுக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டிருப்பவர்கள் டாக்டர்களே. இதை எல்லாம் பார்த்து பி பி எகிறிப் போய் குடும்பத் தலைவிகள் ( சில குடும்பத் தலைவர்கள் கூட ) டாக்டர் வீடுகளுக்குப் படை எடுக்கிறார்கள். டாக்டர்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

இப்போதைக்கு இவ்வளவு போதும்.

5 comments:

  1. முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்க.. கர்ப்பமாவே இருப்பாங்க. அதுவும் வயிறு பெருசாகாம.. எத்தனை எபிசோடுகள் ஆனாலும்.

    ReplyDelete
  2. ஹிலேரியஸ் ஹரீஷ்! கலக்கித் தள்ளியிருக்கே!
    இதுலேந்து ஒண்ணு மஹா தெளிவ்வா தெரியறது! நீ படு பயங்கர தீவிரமா சீரியல்கள் பார்த்துண்டு இருக்கே போல்ருக்கே?

    ReplyDelete
  3. அசத்திட்டீங்க... 4, 6, 7 இது மூணும் டாப் கிளாஸ். நானும் நினைச்சிருந்த விஷயங்கள்.

    ReplyDelete
  4. ஹஹ்ஹ்ஹ்ஹா அட்டகாசம்.
    பெரிய ரிசர்ச்சே நடந்துருக்கும் போல. ஜூப்பர்

    ReplyDelete
  5. Ranganathan GaneshJune 4, 2015 at 6:09 AM

    அருமையாக விவரித்துள்ளீர் ஹரீஷ்! நாளாக நாளாக இவை இன்னும் மோசமாகவே ஆகின்றன.
    நான் ஏற்கனவே சீரியல் கில்லர் ஆகியாச்சு!

    ReplyDelete