Friday, August 8, 2014

நண்பேண்டா... நட்புடா.....

கல்லூரி வரைக்கும் சிறு நகரமான எங்கள் ஊரிலேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டியாகி விட்டது. சென்னை எந்த திசைப் பக்கம் இருக்கிறதென்று கூட தெரியாது. இது படி இது படிக்காதே என்று வழிகாட்டவெல்லாம் யாரும் கிடையாது. சரி, படித்தது பி காம். ஒன்று CA படிக்க வேண்டும் அல்லது CWA. ( அப்போ தெரிஞ்சிருந்தது அது ரெண்டு தான்).

CA படித்தால் மூன்று வருஷம் ஆர்ட்டிக்கிள்ஸ் பண்ண வேண்டும் என்று கேட்டதுமே அஸ்தியில் ஜுரம். பேசாம CWA சேர்ந்துடுவோம் என்று முடிவு எடுத்தாயிற்று. எல்லா விஷயங்களையும் போல் இதிலும் மூன்று பேர் கூட்டுச் சேர வந்தார்கள். என்னை நம்பி. பாவம்.

CWA இன்ஸ்டிட்யூட்டிலேயே க்ளாஸ் சேர்வதென்று தீர்மானம். அடுத்த பிரச்னை தங்குவது. மாமா பெரிய மனசு பண்ணி அவர் ஏரியாவிலேயே ஒரு ரூம் பார்த்துக் கொடுத்தார். அந்த ஏரியா க்ரோம்பேட்டை. க்ளாஸ் எக்மோரில்.

ஓனர், நாங்கள் சின்னப் பசங்க ( அப்போ ) என்பதாலோ என்னவோ கொஞ்சம் அதிக அதட்டலாகவே பேசினார். கண்டிஷனெல்லாம் போட்டார்.சும்மா ப்ரெண்ட்ஸையெல்லாம் ரூமுக்கு கூட்டிட்டு வரக் கூடாது. நீங்க நாலு பேர் மட்டும் தான் இருக்கணும்கிறது முக்கியமான ரூல்.

"நாங்க யாரய்யா கூட்டிட்டு வரப் போறோம். எங்களுக்கே ஒருத்தனையும் தெரியாது"  என்று அப்போது நினைத்தோம்.

எல்லா ப்ளாக் அண்ட் வொயிட் படங்களிலும் வருவது போல் அப்போது விதி எங்கள் நாலு பேரின் தலைக்கு பின்னால் நின்று கொண்டு பி.எஸ். வீரப்பா சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு தெரியவில்லை ( தலைக்கு பின்னால் இருந்ததில்லையா? அதான் )


காலையில் ரெண்டு மணி நேரம் மட்டும் க்ளாஸ். ஒன்பது மணி க்ளாஸுக்கு ஏழு மணிக்கு ரூமிலிருந்து கிளம்பி ட்ரெயின் பிடித்தால் எட்டேகால் சுமாருக்கு எக்மோர். அப்படியே பொடி நடையாய் கென்னத் லேன் வழியே போய் அங்கிருக்கும் ஒரு ஆப்பக் கடையில் நாஷ்தா பண்ணி விட்டு இன்ஸ்டிட்யூட்டுக்கு நடை. பதினோரு மணிக்கு க்ளாஸ் முடிந்ததும் அடியைப் பிடிடா என்பது போல் திரும்பவும் எக்மோர்.

இது தான் ரொட்டீன்.

நாலு பேரில் பாலாஜி மட்டும் கொஞ்சம் வித்தியாசம். அடிக்கடி தனியாக எங்கேயாவது போய் விட்டு வருவான். கேட்டால் வாக்கிங் போய்ட்டு வந்தேன் என்பான்.அவனிடம் மட்டுமே அப்போது மொபைல் இருந்தது.
ஒரு மாதிரியாக செட்டில் ஆகி விட்டிருந்தோம். அப்போது தான் ஒரு நாள் ராத்திரி எட்டரை மணி சுமாருக்குபாலாஜிக்கு ஒரு போன் வந்தது.எங்கே என்று சொல்லாமல் கிளம்பிப் போய் விட்டான்.

அரை மணி இருக்கும். திரும்பி வந்தான். கூடவே ஒருத்தனை கூட்டி வந்தான். இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஞாபகம் வந்து விட்டது. காலேஜில் நாங்கள் பி காம் படிக்கும் போது பி பி ஏ டிபார்ட்மெண்டில் இருந்தவன்.ப்ரசாத். இவன் இங்கே என்ன செய்கிறான்? என்று யோசித்து முடிப்பதற்குள் இன்னும் ஒரு மூன்று பேர் வந்தனர்.கையில் லக்கேஜோடு.

ஒருத்தன் மூஞ்சியும் சரியில்லை.எனக்கா, லக்கேஜெல்லாம் பார்த்ததும் அஸ்தியில் ஜுரம். ரொம்ப பயந்த சுபாவமானதால் அவனைப் பார்த்து வெறுமனே புன்னகைத்து " வா மச்சி... எப்டி இருக்க" போன்ற விசாரிப்புகளை முடித்து விட்டு பாலாஜியை தனியே தள்ளிக் கொண்டு வந்து கேட்டேன் என்ன விஷயம் என்று.திரு திரு வென்று முழித்தான்..

அதற்குள் தினேஷும் சுரேஷும் வந்து விட்டார்கள் ( ரூமில் மிச்சமிருக்கும் ரெண்டு பேர் ). அதே கேள்வி. என்னவோ தட்டுத் தடுமாறி பதில் சொலத் தொடங்கும் முன், ப்ரசாத்தே வந்து விட்டான். நாங்கள் பேசிக் கொண்டிருந்தது புரிந்து விட்டது போல.

" ஒரு சின்ன ப்ரச்னை டா. ஓனர் ரூமை விட்டு தொரத்திட்டான். அதான்...." என்றான்.

என்ன என்பது போல் கிலியடித்துப் போய் நாலு பேரும் பார்த்தோம்.

அதற்குள் நகர்ந்து போய் விட்டான். சினிமாவில் உணர்ச்சிகரமான வசனங்களை திரும்பி நின்று கொண்டு நிலைப்படியில் முட்டுக் கொடுத்துக் கொண்டு ஏதாவது சொல்வானோ என்று அவன் பின்னாலேயே போனோம்.நேராக பால்கனிக்குப் போனான். டவுசர் பாக்கெட்டிலிருந்து சிகரட்டை உருவி பற்ற வைத்துக் கொண்டான்.

அவன் கூட வந்த மூன்று பேரும் ஏற்கனவே அங்கே இருந்தனர். யாருக்கு வந்த சீக்கோ என்பது போல் சாவகாசமாகப் புகை விட்டுக் கொண்டிருந்தனர்.

ப்ரசாத், அவனுக்கு அடியாள் போலிருந்த இன்னொருத்தனை, " மாப்ள சொல்றா" என்று பணித்தான்.

எங்கள் நாலு பேரையும் பரிதாபமாகப் பார்த்த அடியாள், " அது ஒண்ணும் இல்ல பாஸ். எங்க ரூம் வழியா ஒரு பொண்ணு டெய்லி டைப்பிங் க்ளாஸ்க்கு போவும். சும்மா கலாய்ச்சிட்டு இருப்போம். இன்னிக்கு அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்து ரூமுக்குள்ள தள்ளி கொஞ்சம் ஓவரா கலாய்ச்சிட்டோம். பிரச்னை ஆயிடுச்சு. ஓனர் கபோதி தொரத்திட்டான்" என்றான்.

செட்டிநாடு மெஸ்ஸில் சாப்பிட்டு வந்திருந்த பரோட்டா வயிற்றில் கலக்கியது.

ஓனர் மூஞ்சி கண் முன் வந்து போனது.

 - வேற என்ன? தொடரும் தான்
 



1 comment:

  1. சுவாரஸ்யம். நாம் சும்மா இருந்தாலும் நம்மைத் தேடிவரும் வம்பு! ம்ம்..

    ReplyDelete