Saturday, June 14, 2014

அர்த்தமில்லாதது

ஒற்றைக் கால் செருப்புடன் இன்னொரு கால் செருப்பைத் தேடிக் கொண்டு மெல்ல நடந்தேன். மெல்ல என்றால் மிக மிக மெதுவாக.ஏன்? தெரியவில்லை. காரணம் புலப்படவில்லை.

உடன் வந்த நண்பன் ஏதோ பேசிக் கொண்டே வந்தான். என்ன பேசுகிறான்? புலப்படவில்லை. ஆனால் காணாமல் போன என் செருப்பைப் பற்றி முதலில் பேசினான். அப்புறம் நிறைவேறுமோ நிறைவேறாதோ என்ற நிலையில் இருக்கும் என் காதல் ஆசையைப் பற்றி பேசினான். சரியான வார்த்தைகளைத் தான் கிரகிக்க முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை.

ஒரு புறம் முழுக்க வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள். சிதறிக் கிடந்த துடை துணிகள், சிந்திக் கிடந்த ஆயில் கறைகள். இன்னொரு புறம் வரிசையாக ஷட்டர் போட்டு மூடப் பட்ட கடைகள்.   எல்லாவற்றையும் ஒரே போர்வையாகப் போர்த்தியிருந்த இருளில் குழைத்த அமைதி. ஏன் ஒரு கடை கூடத் திறக்கவில்லை? தெரியவில்லை.

கீழே குனிந்து கவனமாக செருப்பைத் தேடிக் கொண்டே நடந்தேன். பாதை முடியும் இடம் வரை தேடியாயிற்று. காணவில்லை. திரும்பிப் போகலாம். அருகிலிருந்த நண்பன் காணவில்லை. பெரிதாகக் கவலைப் படத் தோன்றவில்லை. வீட்டுக்குப் போயிருப்பான். திரும்பி நடக்காமல் மெல்ல பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன். லாரிகளின் அடியில் பார்த்தபடியே.

ஒரு லாரியின் அடியில் அந்த சிறுவன் இருந்தான். கீழே கிடந்த குப்பைகளின் இடையே சில்லறைகள் சிதறிக் கிடந்தன.  குத்துக்காலிட்டு அமர்ந்து அவைகளை ஒவ்வொன்றாகத் தேடித் தேடிப் பொறுக்கிக் கொண்டிருந்தான். தோள் தொட்டுத் திருப்பினேன். திடுக்கிட்டுத் திரும்பினான்.

"என்னடா தேடற?"

" என் காசெல்லாம்  இங்க விழுந்திடுச்சு அண்ணா... அதான்".

"எப்படி விழுந்தது?"

" காலேல விளையாடும் போது விழுந்திடுச்சு. "

"இப்ப வந்து தேடற?"

" காலைலயே தேட ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அந்த பேய் வந்து என்னைப் பிடிச்சுகிட்டு கலாட்டா பண்ணிடுச்சு"

" இங்க பேய் இருக்கா என்ன?"

" ஆமாண்ணா... அந்த வெள்ளைப் பேய். காலைல வந்து என்னைப் பிடிச்சுகிட்டு ஒரே அட்டகாசம். தப்பிச்சா போதும்னு ஓடிட்டேன்.இப்ப தேடறேன்"

"சீக்கிரம் வீட்டுக்குப் போ".. தேடல் வெற்றி பெற வாழ்த்தி விட்டு மீண்டும் பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.



மற்றொரு புறம் மூடியிருந்த வரிசைக் கடைகளில் ஒரே ஒரு கடையில் மட்டும் வெளிச்சம். போகும் போது இந்தக் கடை திறந்திருக்கவில்லையே?

எட்டிப் பார்த்தேன்.

ஊதுபத்தி மணம் கவிந்து கொண்டிருந்தது. கீழே எழுதுவதற்கென்று போடப்பட்டிருந்த குட்டை மேஜை. அதன் கீழ் பட்டுத் துணி விரிக்கப் பட்டிருந்தது. அருகில் சில பல ஓலைச் சுவடிகள். ஒரு மஞ்சள் பை. மஞ்சள் நிற சுவற்றில் ஓரிடத்தில் குங்குமத்தால் எழுதப் பட்டிருந்த ஓம். இந்த இடம் எங்கோ ஏற்கனவே பார்த்தாற்போல் இருக்கிறதே?

கண் மூடி சாய்வு நாற்காலியில் படுத்திருந்தவரையும் ஏற்கனவே எங்கோ பார்த்தாற்போல் இருந்தது. சற்றே கலங்கலாக வந்த நினைவு ஸ்திரம் பெற்றது. இவர்... இவர் நான் ஆறாவது படிக்கும் போது எனக்கு ஹிந்தி பயிற்றுவித்த மிஸ்ஸின் கணவர். இவர் ஒரு ஜோசியர். இங்கென்ன செய்கிறார்?

"அய்யா வணக்கம்.."

மெல்லக் கண்களைத் திறந்தவர், மலர்ந்தார். "வாப்பா...சௌக்கியமா?"

எனக்குத் தான் இவரைத் தெரியும். இவருக்கு என்னைத் தெரியாதே? இவ்வளவு அன்பாக வரவேற்கிறார்?

"வா..வா... உக்காரு". அருகில் அமர வைத்துக் கண்களுக்குள் உற்றுப் பார்த்து புன்னகை. தலை மேல் கை வைத்து ஆசீர்வாதம்.

"கவலைப் படாதே.. நடக்குமோ நடக்காதோன்னு ஊசலாட்டம் இனிமே இல்லை. நிச்சயம் நடக்கும் ."

என்ன சொல்கிறார் இவர்... நடந்து விடுமா..சந்தோஷத்தில் தொண்டையில் எச்சில் முழுங்கும் க்ளக் சத்தம் வெளியில் கேட்டது. சிரித்தார்.

"அவளோடு நிச்சயம் சேர்ந்துடுவே.. அவளும் ஒத்துப்பா. வீட்ல எல்லாரும் ஒத்துப்பா.அவாத்துல, உங்காத்துல, எல்லாரும்"

மேலும் மேலும் சந்தோஷம். பொங்கி வழியும் சந்தோஷம். கட்டுப் படுத்த முடியாத சந்தோஷம்.கரை புரண்டு கறைகளையெல்லாம் அடித்துக் கொண்டு மூழ்கடித்து ஹோவெனப் பரவும் சந்தோஷம்.சந்தோஷத்தில் வியர்க்குமா என்ன? எனக்கு வியர்த்தது.

" நாளைக்கு சாயங்காலம் நாலரை மணிக்கு 4.4 அலைவரிசையில ரேடியோவுல ஒரு பாட்டு வரும். உன் வாழ்க்கைக்கான பாட்டு அது. மறக்காமல் கேளு. உன்னதப் படுவாய்".

"94..4 அலைவரிசையா அய்யா?"

மீண்டும் சிரிப்பு. " நான் சொன்னேனே சரியா கேக்கலையா... 4.4 தான்".

புரியவில்லை. 4.4 எப்படி?... மேலும் கேட்க ஏனோ தோன்றவில்லை.. விடை பெற்றுக் கொண்டு நகர்ந்தேன்.

வெளியில் சூழ்நிலை மாறவில்லை. ஆனால் புத்திக்கு எட்டியிருந்த செய்தி எல்லாவற்றையும் குளுமையாக்கி இருந்தது.லாரிகள் அழகாகத் தெரிந்தன.

வீட்டை நோக்கி ஒற்றைக் கால் செருப்புடன் நடந்தேன்.பின்னோக்கித் தான்.

.................

அம்மா அப்பா எல்லாம் கீழே தரையில்.ஆச்சர்யமாக அவளின் அப்பா அம்மாவும் அங்கேயே அருகில். இவர்கள் எப்போது ராசியானார்கள் என்று யோசனையுடன் நான் சோபாவில். கண்கள் டி வியில். ஏதோ ஒரு படம். என்ன படம்? மனதில் பதியவில்லை. இருந்தும் பார்த்துக் கொண்டிருந்தேன்.மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் சொன்னது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.எப்படி? 4.4? எப்படி?

அவள் மெல்ல உள்ளே இருந்து வந்தாள். நைட்டி அணிந்திருந்தாள். அறை முழுக்க ஷாம்பூ மணம். தலை குளித்திருந்தாள். இன்னேரத்துக்கு என்ன குளியல்? அந்த சூழலில் அவள் அவ்வளவு அழகு. என்னைப் பார்த்தாள். என்னையே பார்த்தாள். நானும் பார்த்தேன். மோகனமாகச் சிரித்தாள். சிரித்தேன். மீண்டும் சந்தோஷம் கரை உடைத்துக் கொண்டு பாயத் தொடங்கியது. தலையைத் துடைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். மெல்ல சோபாவில் அமர்ந்தாள்.

அவள் அருகில் அமர்ந்திருக்கிறாள் என்பதே போதுமானதாக இருந்தது. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து டி வியில் கண் பதித்திருந்தவள் மெல்ல தோளில் சாய்ந்தாள். அம்மா திரும்பிப் பார்த்தாள். அப்புறம் அப்பா. அப்புறம் அவள் அம்மா.பிறகு அப்பா. ஒருவர் ஒரு வார்த்தை பேசவில்லை. மீண்டும் டி வி யில் பார்வையை பதித்துக் கொண்டனர். எப்படி இது? முதலில் எப்படி இவள் என்னை ஏற்றாள்? தெரியவில்லை.

இவர்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை? அதுவும் தெரியவில்லை.ஏன் இப்படி எல்லாம் அளவு கடந்த சந்தோஷமாக இருக்கிறது. புலப்படவில்லை.

இருந்தும் சந்தோஷத்தில் தானாக புன்னகை விரிந்தது.

அருகில் இருந்த மொபைலை எடுத்து அதே புன்னகையுடன் ரேடியோவை ஆன் செய்தேன். அலைவரிசைத் தேடலை நிமிண்டினேன். முதல் சேனலாக 4.4 கண் சிமிட்டி  சிரித்தது. நானும் சிரித்தேன். ஹிந்தி மிஸ்ஸின் கணவர் தாடிக்குள்ளிருந்து சிரித்தார். தோளில் சாய்ந்திருந்தவளின் கூந்தலில் இருந்து ஷாம்பூ மணம் அலையலையாய்ப் படர்ந்து மூச்சடைக்கச் செய்தது. ஆனாலும் இன்பமாக இருந்தது.

ஹெட் போன் எடுத்து காதில் மாட்டிக் கொண்டு 4.4 ஐ கேட்கத் தயாரானேன்.வாழ்க்கைக்கான பாட்டு. உன்னதப் படுத்தும் பாட்டு. என்னவாக இருக்கும்?


-------------------------------

உச்சஸ்தாயியில் அலாரம் அடிக்கத் துவங்கியது.


No comments:

Post a Comment