Tuesday, June 10, 2014

டியர் இனியா


டியர் இனியா...

எதற்காக இந்தக் கடிதம்? தபால்களும் தந்திகளும் ஏன், கையால் எழுதுவதே வழக்கொழிந்து போய் அலைபேசித் திரையையும் ஐபேட் திரையையும் காதலிகள் போலவும் காதலன்கள் போலவும்  தடவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எதற்கு இந்தக் கடிதம்?

என்னவோ. எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் பழக்கமில்லாமல் கை வலித்தாலும் , கோழி குப்பை கிளறியதை விட மோசமான கையெழுத்தாயிருந்தாலும் பரவாயில்லை என்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நீ எப்படி இருக்கிறாய்? தமிழ் நன்றாக இருக்கிறாளா? என்ன செய்து கொண்டிருக்கிறாள்?

சரி..

கடிதத்தை எங்கிருந்து தொடங்கட்டும்?

நாம் முதன் முதலில் சந்தித்தது, சண்டை போட்டது, பேசியது அப்புறம் நான் ப்ரொபோஸ் செய்தது, நீ என்னை அலைய விட்டு ஓகே சொன்னது இதெல்லாம் பலப் பல தமிழ்ப் படங்களில் பார்த்து சலித்தாகி விட்டது. அதெல்லாம் வேண்டாம்.

நாம் இருவரும் உனக்குப் பிடித்த திருச்செந்தூர் கோவிலில் போய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை கண்கள்  விரியப் பகிர்ந்து கொண்டாயே .. அங்கிருந்து தொடங்கட்டுமா... ம்ம்.. சரி..

அப்போது உன் கண்களில் தெரிந்த ஆர்வம். நீ வாக்கியத்தை முடிக்கும் முன்னரே நான் முடிவு செய்து விட்டேன். நம் கல்யாணம் திருச்செந்தூரில் தானென்று.

அவ்வப்போது உன் அப்பா பாராமுகமாய் இருக்கிற கவலை வந்து சீண்டிக் கொண்டே இருந்தாலும் கல்யாண வேலைகள் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டேன். எல்லாம் நீ கொடுத்த தைரியத்தில் தான்.

எனக்கு அந்தக் கவலையும் இல்லை. உன்னைத் தவிர என்னை என்னடா  என்று கேட்க யாருமில்லை.

ரவியும் சுகுவும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது, நாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஓயாமல் பார்த்துக் கொண்டே இருந்தது, நடு நடுவே நினைவு வந்த போது ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக் கொண்டது, எல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா? எனக்கு இருக்கிறது. அழுத்தமாக.

கோவிலில் தாலி கட்டி முடிந்தவுடன் " போடா நீயும் உன் சம்பிரதாயமும்" என்று கொஞ்சலாகக் கடிந்து விட்டு சட்டென்று என் தோளில் சாய்ந்து கொண்டாயே? இன்னமும் கூட லேசாக வாடிய மல்லிகையின் மணம் வருகிறாற் போலிருக்கிறது அவ்வப்போது என் தோள் மீதிருந்து.

உன் அப்பாவைப் போய்ப் பார்த்த எபிசோடை மட்டும் தயவு செய்து மறந்து விடு என்று சொல்லத் தான் ஆசை. என்னாலேயே முடியவில்லை. உன்னை எப்படி சொல்ல? இருந்தாலும் அவ்வளவு சொல்லி இருக்க வேண்டாம் அவர்.

ஒரே நல்ல விஷயம் என்ன தெரியுமா...அவ்வளவு தகிக்கும் கோபத்திலும் அவர் என்னை மட்டுமே திட்டினார். அந்த வகையில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.

அது சரி, இனியா என்று பெயர் உனக்கெப்படி வைத்தார் உன் அப்பா?.முணுக்கென்றால் உனக்கு வரும் கோபத்தை எந்த வகையிலும் உன் பேரோடு சேர்த்துப் பார்க்க முடியாதே. இதில் முரண் என்ன தெரியுமா.... அந்தக் கோபத்தில் தான் நான் விழுந்தேன். உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபப் படுத்தி சூடேற்றுவதும் கொதிநிலை வந்ததும் சட்டென்று மண்டியிட்டு மடங்கி உன்னை சமாதானப் படுத்துவதும் எனக்குப் பிடித்த விளையாட்டு தெரியுமோ?

அப்போது கோபமும் அடக்க மாட்டாத புன்னகையும் கலந்து நீ பார்ப்பாயே ஒரு பார்வை. உயர்தர ஸ்காட்ச்சின் மூன்றாவது ரவுண்டில் ஏறும் மிதமான அற்புத போதையைப் போன்றது அது.

உனக்காகவே சுற்றிலும் தோட்டம் இருப்பது போல் வீட்டை தேடித் தேடிப் பார்த்துக் கண்டுபிடித்தேன் நாம் குடியிருக்க. ஆனால் உனக்கு தோட்டம் வைக்க வளர்க்கவெல்லாம் ஆசை கிடையாது. பார்க்க மட்டுமே. நல்ல வேளை எனக்கு உன்னை சந்தோஷப் படுத்துவது மட்டுமே குறியாய் இருந்தது. அதனால் வீட்டில் டம்ளரைக் கூட நகர்த்தி வைக்காத எனக்கு தோட்ட வேலை பிடித்துப் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கொசுக் கடியையும் மீறி ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு முத்த விளையாட்டு விளையாடுவோம் ஞாபகம் இருக்கிறதா.. நான் முத்தமிட முயற்சிப்பேன். நீ தடுக்க வேண்டும். பிறகு உன் முறை. நான் தடுப்பேன். யார் அதிக முத்தங்கள் இடுகிறோமோ ஜெயித்ததாக அர்த்தம். ஒரு நாள் கூட நான் ஜெயிக்க மாட்டேன். உன் முத்தத்தை தடுக்க நான் என்ன மடையனா?  சும்மா தடுப்பது போல் பாவனை செய்வேன். உனக்கும் அது தெரியும்.

எப்போதும் அது குறித்து புகார் செய்வாய். சண்டை போடுவாய். ஆனாலும் ஒவ்வொரு முறையும் உற்சாகமாகத் தான் விளையாடுவோம் அந்த ஆட்டத்தை.எழுதும் போதே எனக்கு இதழோரம் புன்னகை தேங்கி நிற்கிறது. . கன்னத்தைக் குறி வைத்து நீ இடும் முத்தம் நான் தடுத்ததால் கழுத்தில் தான் போய்ப் பதியும்.கழுத்தை லேசாகத் தொட்டுப் பார்க்கிறேன். உன் ஈரம் படிந்தாற் போலிருக்கிறது.

சமைக்கத் தெரியாமல் சமைக்கிறோம் பேர்வழி என்று ரெண்டு பேரும் சேர்ந்து சமையலறையை அதகளம் செய்ததும் பக்கத்து வீட்டிலிருந்து வந்து விசாரித்து விட்டுத் தலையில் அடித்துக் கொண்டு போனதும் ரெண்டு பேரும் சோபாவில் விழுந்து புரண்டு சிரித்தது ஞாபகம் இருக்கிறதா உனக்கு? அதற்கு அடுத்த நாளிலிருந்து தான் நீ அடிக்கடி சோர்ந்து போக ஆரம்பித்தாய். மார்னிங் சிக்னஸ் என்றாய்.. என்னென்னவோ சொன்னாய்..

டாக்டரிடம் செக்கப்புக்குப் போன அந்த தினம்....சினிமாக்களில் பார்த்து மட்டுமே அது போன்ற விஷயங்கள் பழகியிருந்த எனக்கு அது புது அனுபவம். டாக்டர் பரிசோதனை எல்லாம் முடித்த பின் நீ கன்சீவ் ஆகியிருக்கிறாய் என்று சொன்னாரே.. அப்போது . அந்தக் கணம்.. அந்த மாபெரும் விஷயம் என் மூளைக்குப் போய்ச் சேர கொஞ்சம் நேரமானது.

அதுவுமில்லாமல், அந்த மாதிரி ஒரு விஷயத்துக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை வேறு. ஹோம் வொர்க் செய்யாத குழந்தை போல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றேன்.. ஆனால் நீ என்னை சரியாகப் புரிந்து கொண்டாய்.

டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு வந்து வீட்டில் நம் கட்டிலில் என்னை மடியில் கிடத்திக் கொண்டு தலையைக் கோதிக் கொண்டே, இனிமேல் நாம் ரெண்டு பேரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எனக்கு என்ன பொறுப்பு வேண்டும் , எது சரி எது தப்பு செய்யலாம் செய்யக் கூடாது என்று பாடம் எடுத்தாயே....எந்த வகுப்பிலும் நான் பாடத்தை அவ்வளவு ஸ்வாரஸ்யமாகப் படித்ததில்லை. உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவ்வப்போது கோட்டை விட்டாலும் நீ சொன்ன நிறைய விஷயங்கள் மனதில் அப்படியே நிற்கின்றன. இப்பவும் அதில் பலவற்றைப் பின் பற்றுகிறேன்.

அது சரி, உனக்கு  எங்கிருந்து வந்தது அவ்வளவு பொறுப்புணர்ச்சியும் சட்டென்ற முதிர்ச்சியும்? எவ்வளவு விஷயங்கள் சொன்னாய்?ஒவ்வொரு நாளும் நீ எனக்கு ஆச்சரியம் தான். அதுவும் தினமும் புதிய ஆச்சரியம்.

ஆனால் அதற்குப் பிறகு நான் அவ்வளவு சீக்கிரம் சமைக்கக் கற்றுக் கொண்டது ஆச்சரியம் தான். நீ பக்கத்தில் இருந்து சொல்லச் சொல்ல அவ்வப்போது உன்னை முத்தமிட்டபடியே சமைத்த நாட்கள் சொர்க்கம்.

இந்த விஷயம் கேள்விப்பட்டு எல்லா அப்பாக்களையும் போல் மனம் மாறி விட்டேனென்று வந்த உன் அப்பாவிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை நீ. நான் தான் காபி போட்டுக் கொடுத்து அவரிடம் பேசி அனுப்பி வைத்தேன். அப்போது தான் முதன் முதலில் நான் உன்னைக் கண்டித்தேன் என்று நினைக்கிறேன்.அதற்கு நீ சொன்ன பதில் தான் நீ நானாக இருக்கக் காரணம் என்று தெரிந்து கொண்டேன். இன்னும் எவ்வளவு அன்பு உனக்குக் கொடுத்தால் தகும் என்று புரியாமல் தவித்தேன். இதெல்லாம் உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

குழந்தைக்குப் பெயர் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து தேடிய வைபவம் இருக்கிறதே... அடேங்கப்பா... எல்லா அப்பா அம்மா போலவும் தான் நாம் தேடினோம் என்று மூளை சொன்னாலும் மனசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது. எத்தனை அலசல் எத்தனை தேடல், எத்தனை வடிகட்டல். ஆனால் கடைசியில் தேர்ந்தெடுத்தது, நாம் ரெண்டு பேரும் அழகான தமிழ்ப் பெயராக வேண்டும் என்று முதலில் குறித்து வைத்திருந்த பெயர் தான். தமிழ். அந்தப் பெயரை ஒவ்வொரு முறை சொல்லும் போதும் உனக்கு அவ்வளவு சந்தோஷம். பையனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதே பெயர்.

நான் பெண்ணென்றும் நீ பையனென்றும் சொல்லிக் கொள்வோம்.சிரித்துக் கொள்வோம்.

வழக்கம் போல் தானே அன்று காபி கொடுக்க உன்னை எழுப்பினேன்.ஏன் நீ எழுந்திருக்கவில்லை? எனக்கு இன்னும் கோபம் தான் உன் மீது.எழுந்தவுடன் காபி போடும் நேரம் மட்டும் தான் தனியாய் இருந்து பழக்கம் எனக்கு. திடீரென்று நீ இந்த மாதிரி புதுப் பழக்கமெல்லாம் செய்தால் எப்படி? வீடே வெறுமை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை எனக்கு. வேறு வழி தெரியாமல் உன் அப்பாவுக்கு தான் போன் செய்தேன். அப்பா வந்தார். அப்புறம் யார் யாரோ வந்தார்கள்.

அவ்வளவு சத்தத்திலும் சந்தடியிலும் உன்னால் மட்டும் எப்படி எழுந்திருக்காமல் தூங்க முடிகிறது? கார்டியாக் அரெஸ்ட் அது இதுவென்று என்னென்னவோ சொல்கிறார்கள். எல்லாம் புத்திக்கு எட்டுகிறது. ஆனால் மனதில் ஒரே யோசனை தான். ஏன் நீ எழுந்திருக்கவில்லை? அவர்க்ள் செய்ய சொன்னதயெல்லாம் செய்தேன். அழைத்த இடத்துக்கெல்லாம் போனேன். ஆனால் ஏதோ ஒன்று தப்பாக இருந்தது. உன்னை என்னவோ செய்தார்கள். பிடித்து நிறுத்து சட்டையைப் பிடித்து அறைய வேண்டும் போலிருந்தது. ஆனால் செய்யவில்லை.உடல் தானாக இயங்கிக் கொண்டருந்தது. ஒன்றும் புரியவில்லை.

உன் அப்பா வந்து என்னிடம் பரிவாக ஏதோ பேசினார். எல்ல்லாரும் வந்து என்னை ஒருகூண்டுக்குள் அடைபட்ட ஜந்துவைப் போல் பரிதாபமாகப் பார்த்து விட்டுப் போனார்கள். என்ன எழவு நடந்ததென்றே தெரியவில்லை.

திடீரென்று பார்த்தால் நீ காணவில்லை. ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டேனெங்கிறார்கள். கேட்டுக் கேட்டு எனக்கு சலித்து விட்டது. அதனால் தான் யாரையும் கேட்காமல் நேரடியாக உன்னை வரச் சொல்லலாமென்று இந்தக் கடிதம் எழுதுகிறேன். இதைக் கண்டதும் தந்தி போல் பாவித்து உடனடியாக வந்து சேர். இதற்கு மேலும் என்னால் காலையில் தனியாகக் காபி குடிக்க முடியாது. தமிழையும் அழைத்து வா வரும் போது மறக்காமல்.

அது சரி, இந்தக் கடிதத்தின் உறையில் விலாசம் எழுத வேண்டுமே?  எங்கிருக்கிறாய் என்று சீக்கிரம் சொல்.

7 comments:

 1. //திடீரென்று பார்த்தால் நீ காணவில்லை. // இதை எழுதாமல் விட்டிருந்தால்தான் கடைசி வரிக்கு இம்பாக்ட் கிடைக்கும்.

  ReplyDelete
 2. மற்றபடி மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது

  ReplyDelete
 3. wow Harish, excellent! Speechless!

  ReplyDelete
 4. என்ன ஆச்சு அவளுக்கு.. மனசு பிறாண்டுகிறது

  ReplyDelete
 5. அருமை ஹரிஷ். முன்னமே நட்பு கிடைத்து இருந்தாலும் இப்பதான் படிக்கிறேன். அருமை. மனசு கொஞ்சம் வலிக்குது படித்தவுடன். எழுத்து எபெக்ட்

  ReplyDelete
 6. முடிவு ரொம்ப சோகமா போச்சி டச்சிங்

  ReplyDelete
 7. உண்மையில் காதல் தோல்வி அடைந்தவன் கூட இவளவு நிதர்சனமாக பகிர்வான சந்தேகம் தான் ... நன்று ஹரிஷ்

  ஆ.நா.ர.ச.

  ReplyDelete